சென்னையில் 104 இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரட்டை கொள்ளையர்களில் ஒருவனை போலீசார் பிடித்ததோடு மற்றொருவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு பாண்டிபஜாரில்ஹோண்டா ஆக்டிவாவில் வந்த இருவர் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரிடம் ஸ்மார்ட்போனை பறித்து சென்றனர். இந்த மொபைல் திருட்டு குறித்து கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.
திருடுபோன அந்த ஸ்மார்ட் போனின் ஐ.எம்.ஐ.இ நம்பரை வைத்து சோதித்தபோது அந்த மொபைலை பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு மார்வாடி இளைஞர் சிக்கினார். அவர் அளித்த தகவலின்படி இந்த செல்போனை விற்ற ரஷீத் என்ற இளைஞரை போலீசார் தேடிப்பிடித்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் தியாகராய நகரில் உள்ள ஒரு பாரில் கரோக்கி பாடல் பாடும் நண்பன்தான் செல்போனை பறித்து விற்றதாக கூறியுள்ளான்.
அதன் அடிப்படையில் அசான் அலி என்பவரது செல்போனை கண்காணித்த காவல்துறையினர் நொச்சிக்குப்பத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பது அறிந்து சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெண் வீட்டில் பதுங்கியிருந்த அசான் அலியை கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
பாண்டிபஜாரிலும், தியாகராயநகர் சத்யா பஜாரிலும் திருட்டு செல்போன்களை வைத்து விற்று வந்துள்ளான் அசான் அலி. போலீஸ் கெடுபிடி காரணமாக பர்மாபஜார் கடையை மூடிவிட்டு சத்யா பஜாரில் உள்ள கடையை மட்டுமே நடத்தி வந்திருக்கிறான். ஒருமுறை திருட்டு மொபைல் வாங்கிய குற்றத்திற்காக கிண்டி காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளான். இதனால் மொத்தமாக திருட்டு மொபைல் விற்கும் கடைகளை மூடிவிட்டு பாரில் கரோக்கி பாடல்களை இசைக்கும் பாடகர் ஆகியுள்ளான். இருந்தாலும் பகுதிநேரமாக திருட்டு மொபைல் போன்களை வாங்கி நண்பர் ரஷீத் கடையில் விற்றுள்ளான். ஐந்தாயிரம் ரூபாய் விலைக்கு போகும் போனுக்கு அதைக் கொண்டு வரும் திருடனிடம் கொடுத்தது போக ரூபாய் 1500 மட்டுமே கிடைக்கும்.
இந்நிலையில் அசான் அலி தனது கூட்டாளியான விக்கி என்கிற காட்டுபூனை என்பவருடன் சேர்ந்து 104 இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு உள்ளான். அவர்கள் இருவரும் ஹோண்டா ஆக்டிவாவில் செல்போன் திருட வலம்வரும் காட்சிகைளயும் கைப்பற்றியுள்ள போலீசார் விக்கி எனும் காட்டுப்பூனையை தேடிவருகின்றனர்.