ஆடு திருடர்களைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன். இவர் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், வெட்டிக் கொலை செய்தது ஆடு திருடும் கும்பல் என்பது தெரியவந்துள்ளது.
சனிக்கிழமை இரவுகளில் திருடப்படும் ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில், சந்தைகளில் விற்கப்படுவதாக காவல்துறைக்கு வந்த தகவலையடுத்து போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆடு திருடும் கும்பலைத் தனியாக இருசக்கர வாகனத்தில் விரட்டியுள்ளார். அப்பொழுது அந்த கும்பல் அவரை வெட்டி சாய்த்து உள்ளது அந்த கும்பல். இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருடர்களால் காவல் அதிகாரி பூமிநாதன் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க மொத்தம் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். அந்த பகுதியில் ஆடுகளைத் திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற சந்தேகத்திற்கிடமான ஆறு நபர்களிடம் இப்பொழுது விசாரணை என்பது நடத்தப்பட்டு வருகிறது. பழைய குற்றவாளிகளிடம் ஒருபுறம் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளத்துப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்தும் வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். அந்த காட்சியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் இருசக்கர வாகனத்தில் மற்றொரு வாகனத்தைப் பின்தொடர்ந்து வேகமாகச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.