
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கரூரில் இன்று தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
முதலில் தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய அவர், பின்னர் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். அதன் பின்னர் காவிரி பாயக்கூடிய 9 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி காவிரி பாயக் கூடிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் இன்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தங்கதமிழ்செல்வன் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். 8 கோடி மக்களின் ஜீவாதார பிரச்சனைக்காக நாம் இங்கு போராடி கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மால் ஆட்சிக்கு வந்தவர்கள் நமக்கு துரோகம் செய்து விட்டு மக்களுக்கு எந்த திட்டத்தையும் தராமல் மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு தலையாட்டி கொண்டிருக்கிறார்கள்.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இருக்கும் போது எவ்வாறு செயல்பட்டார் என்பது தெரியும். இப்போது எடுபிடி ஆட்சியில் இருக்கும் நபர் 60 சதவீத பஸ் கட்டணத்தை உயர்த்தி மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளார். அத்துமீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர். எப்போது தேர்தல் வந்தாலும் இந்த அமைச்சருக்கு டெபாசிட் கூட கொடுக்கக்கூடாது. பணம் கொடுத்து வாக்கு வாங்கி விடலாம் என நினைக்கிறார்கள். அந்த பணம் அவர்களின் பணம் கிடையாது. மக்களின் வரிப்பணம். எனவே துரோக ஆட்சியாளர்களை டெபாசிட் இழக்க செய்யுங்கள். இரட்டை இலை சின்னம் துரோகிகளின் கைக்கு சென்று விட்டதால் அதன் புனிதம் போய்விட்டது.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய அந்த சின்னத்தை 30 ஆண்டுகளாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா பீடு நடை போட செய்தார். தற்போது துரோக கும்பலின் கைக்கு சென்றதால் இரட்டை இலையை தோற்கடிக்கக்கூடிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. இரட்டை இலை சின்னத்தை துரோக கும்பலிடம் இருந்து மீட்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அரசு அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் நடுநிலை தவறி தவறுகள் செய்கிறார்கள். என்னுடைய கூட்டம் நடைபெறக்கூடாது என்பதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று நகராட்சி ஆணையர் தடை வாங்கியுள்ளார். ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மீது இந்த அரசு வழக்கு தொடர பயப்படுகிறது.

எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் உப்பை திண்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். ஆர்ப்பாட்டத்திற்கு வந்த பொதுமக்களை 5 கி.மீ. தூரத்திற்கு முன்பே மறித்து நிறுத்தி விட்டார்கள். விரைவில் ஆட்சி மாற்றம் வரும். நடுநிலை தவறி தவறு செய்யும் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பலனை அனுபவித்தே தீர்வார்கள். தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டில் வழக்கு தொடர்வோம். நான் எதையும் நிதானமாக யோசித்து பேசுபவன். யோசித்து முடிவு எடுத்து சொன்ன பின்னால் பின் வாங்க மாட்டேன். பதவி, அதிகாரத்திற்காக யாரிடமும் மண்டியிடுபவர்கள் நாங்கள் அல்ல.
ஜெயலலிதாவின் உண்மை வாரிசுகள் நாங்கள். சொன்னதை செய்து முடிப்போம். கரூர் மாவட்டத்தில் கிராமம் தோறும், தெரு தெருவாக சென்று மக்களை சந்தித்து அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழலை அம்பலப் படுத்துவேன் என அவர் கூறினார்.