Skip to main content

தேர்தல் பணிக்காக மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்கள்- டி.எஸ்.பிக்கள் மீண்டும் எப்போது பணிக்கு திரும்புவார்கள்? - ஏ.டி.ஜி.பி.க்கள் மற்றும் மண்டல ஐ.ஜிக்கள் நக்கீரனுக்கு விளக்கம்! -Exclusive

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

 

தேர்தல் முடிந்தும் ஏற்கனவே பணிபுரிந்த காவல்நிலையங்களுக்கு பணிமாறுதல் கிடைக்காததால் வீட்டையும் மாற்றமுடியாமல்  குழந்தைகளையும் பள்ளிக்கல்லூரிகளில் சேர்க்கமுடியாமல் குழப்பத்தில் குமுறிக்கொண்டிருக்கிறார்கள் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள். இதில், பெரிதும் பாதிக்கப்படுவது மகளிர் இன்ஸ்பெக்டர்கள்தான். 

tn

 

இதுபற்றி, "தேர்தல் முடிந்தும்… பணிக்கு திரும்பாத இன்ஸ்பெக்டர்கள்… டி.எஸ்.பிக்கள்!  –குமுறும் மகளிர் இன்ஸ்பெக்டர்கள்!" என்ற தலைப்பில் 2019 ஜூன் -14 ந்தேதி நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இச்செய்தி, பாதிக்கப்பட்ட காவல்துறையினர்களின் வாட்ஸ் -அப் குரூப்களில் உலாவி பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில்  எப்போது பழையப்பணிக்கு திரும்புவார்கள்? என்று ஐ.ஜிக்கள் மற்றும் ஏ.டி.ஜி.பி.(சட்டம் ஒழுங்கு) ஏ.டி.ஜி.பி. அட்மின் ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்டோம். 

t

 

மேற்கு மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் ஐ.பி.எஸ்: 
"கூடிய சீக்கிரம் பழைய இடங்களுக்கு மாத்திடுவாங்க. மேக்ஸிமம் ஒருவாரத்துல மாத்திடுவாங்க"

 

மத்திய மண்டல ஐ.ஜி.  வரதராஜ் ஐ.பி.எஸ் :

"போலீஸ் கான்ஸ்டபிள், எஸ்.ஐக்கள் எல்லாம் தேர்தல் பணி முடிந்ததும் மாற்றப்பட்டுட்டாங்க. அதேமாதிரி, படிப்படியா இன்ஸ்பெக்டர்களும் பழைய இடங்களுக்கு மாற்றப்படுவதற்கான உத்தரவு வரும். மேலிட உத்தரவுக்காக காத்திருக்கோம். இந்த வாரத்துக்குள்ள வந்துடும்"

 

மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா ஐ.பி.எஸ்: 
"டி.ஐ.ஜி. கிரைம் பிராஞ்ச், சேலம் ரேஞ்சுல எல்லோருக்குமே ட்ரான்ஸ்ஃபர் போட்டுக்கிட்டிருக்கோமே. யார் யார் யாரெல்லாம் வில்லிங்னெஸ் கொடுக்கிறாங்களோ எல்லோருக்குமோ பழைய இடங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் போடுட்டோம். புது இடம் புடிச்சிருக்குன்னா அங்கேயும் பணி வழங்குறோம். குறிப்பா... ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்கள் அப்புறம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் டி.ஐ.ஜி. மூலமா இன்ஸ்பெக்டர்கள்  ட்ரான்ஸ்ஃபர் போட்டுட்டோம்"

 

வடக்குமண்டல ஐ.ஜி. நாகராஜ் ஐ.பி.எஸுக்கு தொடர்புகொண்டபோது  ''எஸ்.ஐக்களுக்கு பணிமாறுதல் கொடுத்துவிட்டோம். அடுத்தது இன்னும் மூன்று நான்கு நாட்களில் இன்ஸ்பெக்டர்களுக்கும் பணி மாறுதல் கொடுத்துவிடுவோம்'' எனக்கூறினார்.   

j

 

இன்ஸ்பெக்டரகள் மற்றும் டி.எஸ்.பிக்கள் பழைய இடங்களுக்கு பணிமாறுதல் கொடுக்காமல் இருப்பது ஏன் என்று ஏ.டி.ஜி.பி.( சட்டம் ஒழுங்கு)  ஜெயந்த் முரளி ஐ.பி.எஸ்ஸிடம் நாம் கேட்டபோது, " விரைவில் பழைய இடங்களுக்கு திரும்புவார்கள். அதற்கென, இருக்கும் ஏ.டி.ஜி.பி.அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்" என்றார். 

 

ஏ.டி.ஜி.பி. (அட்மின்) கந்தசாமி ஐ.பி.எஸ்ஸிடம் நாம் கேட்டபோது, " நேற்றே அதற்கான இன்ஸ்ட்ரக்‌ஷன்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டேன். விரைவில் பணிமாறுதல் பெறுவார்கள்" என்றார் நம்பிக்கையாக.

 

t

 

தினம் தினம் மகளிர் இன்ஸ்பெக்டர்கள் கண்ணீரோடு ஐ.ஜி., டி.ஐ.ஜிக்களிடம் மனு கொடுத்து கதறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின், குடும்பச்சூழலை கருத்தில்கொண்டு பணிமாறுதல் கொடுத்தால் அவர்களை நம்பியிருக்கும் பொதுமக்களும் பயனடைவார்கள். 
 

சார்ந்த செய்திகள்