காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்று கடைசி நாள் என்பதால், அதனை நிறைவேற்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கட்சி பிரமுகர் இல்ல விழா மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெரம்பலூருக்கு வந்திருந்தார். நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்று கடைசி நாள், மத்திய அரசு அதற்கு உண்டான பணிகளை செய்வதாக தெரியவில்லை. மாறாக கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. எனவே தமிழக முதல்வர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி நமது நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும்.
மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம் என்று நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு பதிலாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்போது தான் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க முடியம் என்றார்.
தொடர்ந்து சென்னையில், காவல்துறை தலைமை காவலர் ஒருவரை ரவுடிகள் விரட்டி விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. ரவுடிகள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிறகும் ரவுடிகள் ராஜ்ஜியம், கூலிப்படையினரின் கொட்டமும் அடங்கவில்லை.
இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடைபெறவில்லை, தேர்தல் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக அதிகாரிகளும் செயல்பட்டு வருகிறார்கள். எனவே தேர்தல் நடத்தமால் ஆளுக்கட்சியினரை அந்தந்த பதவிகளில் நியமனம் செய்து விடலாம் என்று கடிந்து கொண்டார்.
தொடர்ந்து ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்களின் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படுவதால் இது போன்ற மக்கள் விரோத திட்டங்களை அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
Published on 29/03/2018 | Edited on 29/03/2018