நேபாளத்தில் இருந்து சென்னை வழியாக மலேசியாவுக்கு போதைப்பொருள் கடத்திய கும்பலை, சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீஸார் தட்டித் தூக்கி இருக்கின்றனர். இதுதொடர்பாக லாரி ஓட்டுநர்கள் விஜயக்குமார், அழகுராஜா என 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஹாசிஸ் என்று சொல்லப்படும் 10 கிலோ சரக்கின் மதிப்பு ஒன்றே முக்கால் கோடி என்கிறது காவல்துறை.
இதுகுறித்து தனிப்படை போலீஸாரிடம் விசாரித்தோம். அவர்கள் நம்மிடம், “10 நாட்களுக்கு முன்னர் ஆந்திராவின் ராஜமுந்திரியில் இருந்து 75 கிலோ கஞ்சா கடத்தி வந்த கும்பலைப் பிடித்தோம். அந்தக் கும்பலை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது, கஞ்சாவை காட்டிலும் ஹாசிஸ் எனப்படும், கஞ்சா எண்ணெய் கடத்தலும் நடைபெறுவது தெரியவந்தது. நேபாளத்தின் மலைப்பகுதியில் விளையும் கஞ்சா விதைகளை பக்குவப்படுத்தி, அதனை பேஸ்ட் மாதிரி தயாரிக்கின்றனர். இதற்கு பெயர் ஹாசிஸ். இது டூத் பேஸ்ட் போல் இருக்கும். இந்த போதை வஸ்து, ஒரு கிராம் ரூ.1750-க்கு விற்பனை செய்வதாக சொல்கின்றனர். ஹெராயினுக்கு மாற்றாக இதை யூஸ் பண்றாங்க. ஒரு மிளகு சைஸ் எடுத்து அதை நெருப்பில் காட்டி முகர்ந்தால் கிட்டத்தட்ட 20 மணிநேரம் போதையில் மிதக்கலாமாம். அந்த அளவுக்கு இந்தச் சரக்குக்கு நெடியும் போதையும் ஜாஸ்தி என்கின்றனர் கடத்தல் பார்ட்டிகள்.
இவங்களோட டார்க்கெட் மலேசியா, ஆஸ்திரேலியா நாடுகள்தான். நேபாளத்தில் இருந்து நேராக லாரி மூலம் சரக்கு சென்னை மண்ணடிக்கு வந்து சேரும். இங்குள்ள பார்ட்டி நேராக கீழக்கரை அல்லது மண்டபத்திற்கு கொண்டு சேர்க்கும். அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு சென்றுவிடும். இலங்கையில் உள்ள பார்ட்டிகள் ஒரு கிலோவை 10 லட்சத்திற்கு வாங்கி, 15 லட்சத்திற்கு மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவிடும்" என்கின்றனர்.
மேலும், இந்த ஹாசிஸ் எனப்படும் போதை வஸ்து இப்போதுதான் தமிழகம் வழியாக கடத்தப்படுகிறதா என்றால் இல்லை. ஏற்கனவே தமிழ்நாடு வழியாக கடத்தல் நடந்திருக்கிறது. நாங்கள் பிடித்த பார்ட்டி, ஏற்கனவே 30 கிலோவை கைமாத்தி விட்டிருக்காங்க. அதுக்கு பிறகு தான் நாங்கள் 10 கிலோவை பிடிச்சிருக்கோம். நாங்கள் பிஸ்னஸ் பார்ட்டிகள் மாதிரி பேசி, அதிக ரேட்டிற்கு கேட்டதால் அவங்க நம்பிட்டாங்க. அவங்களை நம்ப வச்சு, நாங்களும் பணத்தை ரெடி பண்ணி வீடியோ காலில் காட்டினோம். அதன் பிறகே பார்ட்டிகள் நம்பி லாட்ஜ்க்கு வரச் சொன்னாங்க. நாம செட் பண்ணிய ஆட்கள் அங்கு போய் வாங்கும்போது பிடிச்சிட்டோம். விலை ஜாஸ்திங்கரதால் தமிழ்நாட்டில் பெரும்பாலும் இதை யூஸ் பண்ணலை. ஹெராயினுக்கு மாற்றாக இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியாவில் பயன்படுத்துறாங்க. அதனால், தமிழ்நாட்டில் சில புள்ளிகள் கடத்தலுக்கு உதவி செய்றாங்க. எப்படியும் போலீஸிடம் பிடிபடுவோம்னு தெரிஞ்சும் அவங்க துணிச்சலாக கடத்துறாங்க. கடத்தலில் பெரிய திமிங்கலங்கள் நிறைய இருக்கு. அவங்களையும் பிடிச்சாதான் கடத்தலை தடுக்க முடியும்” என்று தெரிவித்தனர்.