புதுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்ட எல்லை கிராமங்களில் இரவில் ஆங்காங்கே நடக்கும் சூதாட்ட கிளப்புகளில் ஒரு கும்பல் திடீரென நுழைந்து தங்களை போலீஸ் என்று சொல்லிக் கொண்டு பணத்தை மட்டும் அள்ளிக் கொண்டு செல்லும் சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு புதுக்கோட்டை - தஞ்சை மாவட்டம் எல்லை கிராமமான வீரராகவபுரம் ஊராட்சியில் திருச்சிற்றம்பல காவல்நிலைய எல்லையில் உள்ள ஏனாதிக்கரம்பை கிராமத்தில் ஒரு தோட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம், தஞ்சை மாவட்ட இளைஞர்கள் பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென உள்ளே நுழைந்த 5 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கிருந்த கடப்பாக்கல்களை உடைத்து மோட்டார் சைக்கிள்களை அடித்து பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்திவிட்டு செல்போன்கள், மொத்த பணத்தையும் வாரிச்சுருட்டிக் கொண்டு 'நான் பேராவூரணி சிறப்புப் படை எஸ்.ஐ, நீங்க எல்லாரும் சத்தம் போடாம ஓடிப் போயிருங்க. பணத்தை நாங்க ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுக்கிறோம்' என்று ரூ.1.50 லட்சத்தை சுருட்டிக் கொண்டு சென்றனர்.
திருச்சிற்றம்பலம் காவல் எல்லைக்கு ஏன் பேராவூரணி போலீஸ் வந்தாங்க என்ற சந்தேகத்தோடு வெளியேறியுள்ளனர் சூதாட்டக்காரர்கள். இதேபோல ஒரே வாரத்தில் சேதுபாவாசத்திரம் காவல் எல்லையிலும் பல லட்சம் ரூபாய் சுருட்டி இருக்கிறது இந்த கும்பல்.
பணத்தை வாரிச்சுருட்டும் இந்த கும்பல் ஒரிஜினல் போலீஸ் தானா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சில போலீசாரே சொல்வது..,' பட்டுக்கோட்டை சப்டிவிசன்ல உள்ள ஒரு நேரடி எஸ்.ஐ தான் தனக்கு வேண்டிய சில இளைஞர்களை இரவில் அழைத்துக் கொண்டு இதுபோல காவல் எல்லை தாண்டி போய் மண், மணல், சூதாட்டக் கிளப், மது விற்பனை என சட்டவிரோதமான இடங்களில் மிரட்டி பணம் பறித்து செல்கிறார்கள். இதுவரை எந்த புகாரும் வராததால இன்னும் அந்த வழிப்பறி தொடருது. ஆனால் இப்போ ஏனாதிக்கரம்பை சூதாட்ட சம்பவம் மாவட்ட காவல் நிர்வாகத்திற்கு தெரிய வந்திருக்கு. விரைவில் அந்த அதிகாரி மீது நடவடிக்கை இருக்கும். அவரிடம் விசாரித்து கூட வந்த இளைஞர்கள் யார் என்பதும் தெரிய வரும் என்கின்றனர். போலீஸ் என்ற போர்வையில் இப்படியா? தமிழ்நாடு காவல்துறை இப்போதே கண்டுகொள்ளவில்லை என்றால் பெரிய சம்பவங்களும் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் காவல்துறையின் பெயர் தான் அடிபடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.