![kkssr ramachandran - nota](http://image.nakkheeran.in/cdn/farfuture/P_SGB6vj0lxOpxOi6T4qDSiHSTCUt9elPB7gRaNcXQg/1562905551/sites/default/files/inline-images/kkssr%20ramachandran%20-%20nota.jpg)
யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என நினைக்கும் வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பதிவுக்கான பட்டனை இணைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு 2013-ல் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதனையடுத்து 2013-க்கு பிறகு நடந்த அத்தனை சட்டமன்றத் தேர்தல்களிலும், 2014-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் நோட்டாவை அறிமுகப்படுத்தியதுடன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதற்கான இடத்தையும் அளித்தது தேர்தல் ஆணையம்.
இந்த நிலையில் சட்டசபையில் வியாழக்கிழமை நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அருப்புக்கோட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தேர்தலில் நோட்டாவுக்கு (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) ஓட்டு போடுபவர்கள் யார் என்பதற்கு ஒரு விளக்கம் கூறினார்.
அவர் கூறுகையில், தேர்தலில் நோட்டாவுக்கு ஏன் ஓட்டு விழுகிறது. வேலை கிடைக்காதவர்கள் தான் நோட்டாவுக்கு ஓட்டு போடுகிறார்கள். ஊருக்கு 20, 30 ஓட்டுகள் இப்படித்தான் நோட்டாவுக்கு கிடைக்கின்றன.
அதிமுக ஆட்சியில் இரண்டு உலக மதலீட்டாளர்கள் மாநாடுகள் நடந்துள்ளன. ஆனால் எந்த புதிய நிறுவனமும் தொழில் தொடங்கியதாகத் தெரியவில்லை. புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகவில்லை. வேலைகிடைக்காத இளைஞர்கள்தான் நோட்டாவுக்கு வாக்களிக்கின்றனர். புதிய தொழில்களை தொடங்கி அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றார்.