வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்துள்ள ஓனாங்குட்டை பகுதியில் உள்ள காப்புக்காட்டு பகுதியில் ராமசாமி என்பவர் தன்னுடைய நண்பர்களுடன் வழக்கம்போல மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு அவருடைய வயிற்றில் இடது பக்கத்தில் பாய்ந்துள்ளது. சில நிமிடங்களில் மற்றொரு குண்டு அவருடைய இடது காலில் முழங்காலுக்கு கீழ் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
ராமசாமி மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து கீழே விழுந்தது தொடர்பாக நண்பர்கள் அருகில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக ராமசாமி மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார். முதலுதவி சிகிச்சை முடிந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்பொழுது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். துப்பாக்கிக் குண்டு எங்கிருந்து பாய்ந்தது. வனப்பகுதியில் வேட்டையாட வந்தவர்கள் பயன்படுத்திய துப்பாக்கியில் இருந்து குண்டுகள் அவர் மீது தவறுதலாக பட்டதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.