ஆன்லைன் பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசிவரும் 'பப்ஜி மதன்' என்கிற யூடியூபர் தலைமறைவான நிலையில், அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். மேலும், அந்த நபரின் சமூகவலைதளப் பக்கத்தை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன்லைன் விளையாட்டு மூலமாக சிறுவர்கள் மற்றும் பெண்களை ஆபாசமாகப் பேசி யூடியூப் சேனலில் பதிவிட்டுவந்த மதன் என்ற நபர் மீது புகார்கள் குவிந்தன. இதுதொடர்பாக 2 புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த இரண்டு புகார்களின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தார்கள். ஆனால், இதுவரை மதன் ஆஜராகவில்லை.
மதன் இருக்கும் லொகேஷனைக் கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில், ஒருவித தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன்னுடைய இருப்பிடத்தை வேறுவேறு இடமாக மாற்றிக் காட்டக்கூடிய வகையில் மதன் செயல்படுவதாக தெரியவந்துள்ளது. ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட மதன், 'டாக்ஸிக் மதன்', '18 ப்ளஸ்' ஆகிய இரு யூடியூப் சேனல்களை முடக்க காவல்துறையினர் யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் அளித்துள்ளனர். அதேபோல் மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது காவல்துறை.