Skip to main content

எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறைக்கு வராதது ஏமாற்றமளிக்கிறது - ஈஸ்வரன்

Published on 21/06/2018 | Edited on 21/06/2018
er


எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறைக்கு வராதது ஏமாற்றமளிக்கிறது  என்கிறார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர்  ஈஸ்வரன். இது குறித்த அவரது அறிக்கை:

’’தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் இடம் நீண்ட இழுபறிகளுக்கு பிறகு நேற்றைய தினம் மதுரை தோப்பூரில் அமைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தமிழக முதலமைச்சர்  அறிவித்திருப்பது கொங்கு மண்டல மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

சாயக்கழிவு மற்றும் தோல் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபட்டு புற்றுநோய், மலட்டுத்தன்மை, தோல் நோய் உள்ளிட்ட இன்னும் பல்வேறு நோய்களால் கொங்கு மண்டல மக்கள் அதிக அளவில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நோய்களை குணப்படுத்துவதற்காக தரம் வாய்ந்த சிகிச்சைகளை பெற மருத்துவமனைகளை தேடி கொங்கு மண்டல மக்கள் தொலைதூரம் சென்று கொண்டிருக்கும் சூழலில் தான், மத்திய அரசு தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து கள ஆய்வுகள் நடத்தி 5 இடங்களை தேர்வு செய்தது. அந்த 5 இடங்களில் கொங்கு மண்டலமான ஈரோடு மாவட்டம் பெருந்துறையும் இடம்பெற்றது. 

 

அதிக அளவில் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தான் அமைக்கப்பட வேண்டுமென்ற கூக்குரல் கொங்கு மண்டலம் முழுவதும் ஒலித்தது. பலதரப்பட்ட ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும் ஈரோட்டில் தான் புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் இருக்கிறது என்று வெளிகாட்டிய போதும் மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளாமல் செயல்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. தங்கள் பகுதி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளை உணர்ந்து கொங்கு மண்டல அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனையை பெருந்துறையில் அமைக்க வேண்டுமென்று குரல் கொடுத்திருக்க வேண்டும். பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் எதிர்கால சந்ததிகளையாவது புற்றுநோயிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். எய்ம்ஸ் மருத்துவமனையை பெருந்துறையில் ஏன் அமைக்கப்பட வேண்டுமென்ற உரிய விளக்கத்தை தமிழக அரசு மத்திய அரசிடம் தெளிவுப்படுத்தி இருந்தால் மதுரைக்கு போயிருக்காது. ’’

சார்ந்த செய்திகள்