![BSP Armstrong incident Police custody for 11 people](http://image.nakkheeran.in/cdn/farfuture/EGarZSFAYMrxBhXCHG-U25LPODVABuTfo6wSE9mDcsE/1720695988/sites/default/files/inline-images/amstrong-art_4.jpg)
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதோடு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சியினர் எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது. இத்தகைய சூழலில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். சரண் அடைந்த ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனத் தகவல் வெளியானது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பட்டினப்பாக்கம் பகுதியில் ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 11 பேரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
![BSP Armstrong incident Police custody for 11 people](http://image.nakkheeran.in/cdn/farfuture/sN9aERUd8Acx-70s3zkmIyUi67Hzu1oflvtySWyscI4/1720696007/sites/default/files/inline-images/judgement--art-file_56.jpg)
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை சார்பில் 7 நாட்கள் நீதிமன்ற காவல் கேட்ட நிலையில் பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய் மற்றும் சிவசக்தி உள்ளிட்ட 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவலை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.