“போலீசார் சிலருக்கு ரொம்பவே குளிர்விட்டுப் போச்சு!” என்றார், சாத்தூரைச் சேர்ந்த அந்த வழக்கறிஞர். காரணம் – அந்த ஊரின் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில், குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை ஆஜர்படுத்தாமல், வேறொருவரை ஆஜர்படுத்தி மாட்டிக்கொண்டதுதான். நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம் செய்ததற்கு உடந்தையாக இருந்த காவல்துறை ஆய்வாளர், பெண் ஏட்டு உள்ளிட்ட மூவர் மீது தற்போது வழக்குப் பதிவாகியுள்ளது.
![Brother impersonates in court Trapped cops!](http://image.nakkheeran.in/cdn/farfuture/2yOmc7yc21dFj5oHVlclwIAwTTfqU1oeTusU556wLSU/1583893261/sites/default/files/inline-images/Sattur%20Court.jpg)
‘இந்த ஆள்மாறாட்டமெல்லாம் வழக்கமாக நடைபெறுவதுதான்..’ என்றார், அந்த வழக்கறிஞர். ஆள்மாறாட்டம் செய்தது எப்படி?
குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிவந்த ராணுவவீரர் மாரிச்சாமி மீது, சாத்தூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடாசலபதி, வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கில், மாரிச்சாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது சாத்தூர் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றம். அந்தத் தொகை பெறப்பட்டு, நீதித்துறை நடுவரிடம் கையெழுத்து வாங்குவதற்காக ரசீது வைக்கப்பட்டது. அப்போது, ஏற்கனவே காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த ஆவணத்திலுள்ள மாரிச்சாமியின் கையெழுத்திற்கும், தற்போது பெறப்பட்ட கையெழுத்துக்கும் வித்தியாசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், மாரிச்சாமிக்காக நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம் செய்து ஆஜரானவர், அவருடைய சகோதரர் சரவணன் என்பது தெரிந்தது. இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள், ஆய்வாளர் வெங்கடாசலபதியும், பெண் ஏட்டு கணபதியும். விருதுநகர் மாவட்ட உரிமையியல் மற்றும் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்ற இளநிலை உதவியாளர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, பெண் ஏட்டு கணபதி மற்றும் சரவணன் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.