தங்கையின் திருமண நிகழ்ச்சியில், அவர் ஆசைப்பட்ட ஜல்லிக்கட்டு காளை, சண்டை சேவல், கன்னி நாய்கள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை சீதனமாக அளித்த அண்ணனின் செயல் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி செல்வி. இந்தத் தம்பதிக்கு ராயல் என்கிற மகனும் விரேஸ்மா என்கிற மகளும் இருக்கின்றனர். இவர்கள் வீட்டில் சிறுவயது முதலே ஜல்லிக்கட்டு காளை, கன்னி நாய்கள், சண்டை சேவல் என வளர்ப்புப் பிராணிகளை அண்ணன் ராயல் பார்த்துப் பார்த்து வளர்த்து வந்தார்.
அந்தப் பிராணிகள் மீது தங்கை விரேஸ்மா அதிக பாசத்துடன் இருந்து வந்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் வளர்த்து வந்த காளை மாடும் சண்டை கிடாவும் திடீரென இறந்துபோயின. இதனால், தங்கை விரேஸ்மா மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். அதே வேளையில், விரேஸ்மாவிற்கு திருமண வேலைகளும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று விரேஸ்மாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது, தன்னுடைய தங்கை ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தங்கைக்குப் பிடித்த ஜல்லிக்கட்டு காளை, கன்னி நாய்கள், சண்டை கிடாக்கள் போன்றவற்றை சீதனமாக வழங்கியுள்ளார் பாசக்கார அண்ணன் ராயல். இதைச் சற்றும் எதிர்பாராத தங்கை விரேஸ்மா சந்தோஷத்தில் திகைத்துப்போனார்.
அண்ணன், தங்கையின் பாசத்தால் நெகிழ்ந்து போன உறவினர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்யத் தொடங்கினர். மேலும், இந்தச் சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.