சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவில் பிரச்சனைகளை தவிர்க்க 2 நாட்கள் முன்னதாகவே டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவையடுத்து கடந்த ஒருவாரமாகவே கூடுதல் மது பாட்டில்களை டாஸ்மாக் நிர்வாகம் கடைகளில் இறக்கி வைத்திருந்தனர். கடந்த 5 நாட்களாகவே ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் வழக்கத்தைவிட அதிகமாக விற்பனை நடந்துள்ளது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே குன்னக்குரும்பி கிராமத்தில் டாஸ்மாக் கடை அருகே பாரில் பெட்டி பெட்டியாக மதுவிற்பனை நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அறந்தாங்கி காவல் ஆய்வாளர் செந்தில்மாறன் மற்றும் அவரது ஜீப் டிரைவர் உள்பட 3 பேர் சென்றுள்ளனர். அங்கே ஒரு பெண் ஆய்வாளரின் கணவர் சூப்பர்வைசராக உள்ள டாஸ்மாக் கடையில் பார் நடத்தும் காவல் ஆய்வாளரின் சகோதரரின் பாரில் இருந்து 25க்கும் மேற்பட்ட பெட்டிகளில் பல வகையான மது பாட்டில்களும் மது விற்ற பணம் சுமார் ரூ. 75 ஆயிரமும் போலீஸார் கைப்பறினர். மது விற்ற செந்தில்குமாரையும் அழைத்துச் சென்றனர்.
அதே நேரம் மதுபாட்டில்கள் மொத்தமாக வாங்கி வைத்து விற்பனை செய்ய சொன்ன ரவி மற்றும் இன்னொருவரையும் போலிசார் காவல் நிலையம் வரச் சொல்லிவிட்டு சென்றுள்ளனர். அவர்கள் ஒரு வழக்கறிஞருடன் காவல் நிலையம் சென்று சிறிது நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு மது வாங்கி வைத்திருந்த ரவி உள்பட இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதன் பிறகு வழக்கு பதிவு செய்யும் போது செந்தில்குமார் கைது செய்யப்பட்டு 517 மது பாட்டில்களும் ரூ.17 ஆயிரம் பணம் பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரனை செய்து வருவதாக கூறப்படுகிறது.