ஈரோடு வெண்டிபாளையம் அருகே தனியார் பால் பொருள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் சோலார் இ.பி. காலனியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவராவார். இங்கு பால்கோவா, பன்னீர் உள்ளிட்ட பால் பொருள் தயாரிக்கப்படுகிறது. மேலும் பால் விற்பனையும் செய்யப்படுகிறது. இங்கு நான்கு தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். 13 ந் தேதி காலை 6 மணியளவில் மலையம்பாளையத்தை அடுத்த கருமாண்டம்பாளையத்தைச் சேர்ந்த 70 வயது ராமன் என்பவர் பாய்லர் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அழுத்தம் தாங்காமல் அந்த பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே ராமன் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். பாய்லர் வெடித்ததில் பண்ணை மேற்கூரை ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டது. பொருட்களும் சிதறிக் கிடந்தன. சம்பவ இடத்துக்கு ஈரோடு தாலுகா போலீசார் வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இறந்த ராமன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பால்பொருள் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் பாலகிருஷ்ணன் மீது கவனக்குறைவாக செயல்பட்டு விபத்து ஏற்பட வைத்தல் 287, 304 ஏ ஆகிய இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் 13ந் தேதி மாலை பிரேதப் பரிசோதனை முடிந்து ராமன் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவரது உறவினர்கள் தனியார் பால் தயாரிக்கும் நிறுவனம் இறந்த ராமன் குடும்பத்திற்கு உரிய நிவாரணத் தொகை வழங்கினால் மட்டுமே ராமனின் உடலை வாங்குவோம் எனக் கூறி உடலை வாங்க மறுத்து விட்டனர். இதனால் அவரது உடல் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ளது. 14ந் தேதியும் இரண்டாவது நாளாக போலீசார் ராமனின் உறவினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் உரிய இழப்பீடு கொடுக்காமல் உடலை வாங்கமாட்டோம் என உறுதியாகக் கூறிவிட்டனர். இதனால் பாய்லர் வெடிப்பில் பலியான ராமன் உடல் இரண்டு நாட்களாக அரசு மருத்துவமனையிலேயே உள்ளது.