Skip to main content

பொது இடத்தில் கொடிக் கம்பம்; நியாயம் கேட்ட மாணவர்களை மிரட்டிய பாஜக பிரமுகர்! 

Published on 05/01/2023 | Edited on 05/01/2023

 

BJP Flag issue with student in kodambakkam

 

கல்லூரி விடுதியில் பா.ஜ.க. தனது கொடிக் கம்பத்தையும், விளம்பரப் பலகையையும் வைத்ததால் கல்லூரி மாணவர்களுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பாகியுள்ளது. 

 

சென்னை, கோடம்பாக்கத்தில் ஆதி திராவிடர் நலக் கல்லூரி மற்றும் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரி விடுதியில் அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தங்கிப் பயின்று வருகிறார்கள். கல்லூரி மாணவர்கள், ஆங்கில புத்தாண்டுக்கு தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டு, மறுநாள் விடுதிக்குத் திரும்பியுள்ளனர். இந்த நிலையில், கோடம்பாக்கம் விடுதியின் முன்பாக பா.ஜ.க. கொடிக் கம்பம் நடப்பட்டிருந்தது. அதேபோல், விடுதி சுவரில் பா.ஜ.க. விளம்பரப் பதாகையும் வைத்துள்ளனர். இதனை அறிந்த மாணவர்கள், விடுதி காப்பாளரிடம் சொல்லியும் எதையும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. 

 

BJP Flag issue with student in kodambakkam

 

இதனைத் தொடர்ந்து யார் இதை வைத்தது என விசாரித்துள்ளனர். அதில், விடுதியின் முன்பாக தள்ளுவண்டி கடை வைத்துள்ளவரும், கோடம்பாக்கம் பா.ஜ.க. 132 வட்டத் தலைவருமான சங்கர் என்பது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள், “விடுதிக்கு முன்பாக பா.ஜ.க.வின் கொடிக் கம்பத்தையும், விடுதியின் சுவரில் பா.ஜ.க.வின் சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளீர்களே இது சரியா, அரசு இடத்தில் எப்படி நீங்கள் இப்படி செய்யலாம். இதுநாள் வரையிலும் எந்த அரசியல் கட்சிகளும் கொடிக் கம்பத்தை நட்டதில்லை. எந்த உத்தரவும் இல்லாமல், எந்த அனுமதியும் பெறாமல் உடனடியாக கொடிக் கம்பத்தை எப்படி நட்டு கொடியேற்ற முடியும்” எனக் கேட்டுள்ளனர். 

 

பா.ஜ.க.வைச் சேர்ந்த சங்கர், “இந்த இடம் என்ன உங்க அப்பன் சொத்தா; இந்த இடமே...” என அநாகரிகமான வார்த்தையில் சொல்லியுள்ளார். மேலும், “அதில் தங்கியிருக்கும் நீங்களும்...” என்றும் அநாகரிக வார்த்தைகளாலும், தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, “நீங்கள் யாரும் உயிரோடு இருக்க முடியாது” என மிரட்டியுள்ளார். 

 

பயந்து போன விடுதி மாணவர்கள், உடனடியாக கோடம்பாக்கம் காவல்துறையைத் தொடர்பு கொண்டு இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர். உடனடியாக அந்த இடத்திற்கு வந்த கோடம்பாக்கம் காவல் ஆய்வாளர், மாணவர்களை காவல் நிலையத்தில் வந்து புகார் அளிக்கக் கூறியுள்ளார். மேலும், “நீங்கள் கல்லூரி சென்று விடுதிக்கு திரும்பவதற்குள் இங்கு எந்தக் கம்பமும், விளம்பரப் பலகையும் இருக்காது” எனத் தெரிவித்துள்ளார். இதனை ஏற்ற மாணவர்கள் அமைதியாக விடுதிக்குச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்