கோவை ஈஷா தொடர்பான வழக்கை வரும் அக்.21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
ஈஷா யோகா மையத்தின் மீதான குற்றவழக்குகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என ஈஷா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் அவசர வழக்காகக் கடந்த 3ஆம் தேதி (03.10.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றிக் கொள்வதாகத் தெரிவித்திருந்தது.
அதே சமயம் காவல்துறையிடம் இருந்து உயர்நீதிமன்றம் எந்த அறிக்கையைக் கேட்டிருந்ததோ அந்த அறிக்கையை தங்களிடம் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு வழக்கில் கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஈஷா யோகா மையத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள். அங்கு என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை சார்பில் நடைபெற்ற ஆய்வுகள் என்ன என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 15 வருடங்களில் ஈஷா மையம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் பற்றிய தகவல்களும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஈஷா யோகா மையத்தில் சரவணமூர்த்தி என்பவர் மீது பல்வேறு மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையிலே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் என்ற என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஈஷா யோகா மையத்தில் தகன மேடையும். உள்ளது. இதை எதிர்த்து பக்கத்து நிலத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர் எனவும் இதுவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, ஈஷா மையத்தில் உள்ள 533 பேரிடம் உணவு, பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அங்கு பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான குழு மீது முறையாகச் செயல்பாட்டில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈசா யோகா மையத்தில் செயல்படும் மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஈஷா மையத்திற்குச் சென்று காணாமல் போன பலரை காவல்துறையினர் கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஷா மையத்தில் செயல்படும் மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகின்றன என தகவல்கள் பட்டியலிடப்பட்டது.
இந்த வழக்கு இன்று (18.10.2024) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஈஷா விகாரத்தில் பல வழக்குகள் உள்ளதால் இதனை விசாரிக்க தடை விதிக்க கூடாது என அரசு தரப்பு வாதிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 'நிலுவை உள்ள வழக்குகள் மீதான விசாரணையை சட்டப்படி மேற்கொள்ள தடை இல்லை; இந்த வழக்கு தொடர்பான தமிழக காவல்துறையின் அறிக்கையை இன்னும் நங்கள் படிக்கவில்லை' என தெரிவித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 21ம் தேதி ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.