திருச்சி மாவட்டம், மதுரைரோடு, ராஜா டாக்கிஸ் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ஒரு பயணியிடம் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி கத்திக் காட்டி ரூ. 2,000 பறித்ததாக திருச்சி கோட்டை காவல்நிலையத்தில் புகார் பதிவானது. இதனை விசாரித்த கோட்டை காவல்துறையினர், ராஜா (எ) சகாய ஆரோக்கிய தர்மராஜ்(57) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சகாய ஆரோக்கிய தர்மராஜ் மீது கோயமுத்தூரில் இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக 6 வழக்குகளும், திருப்பூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக 11 வழக்குகளும், திருச்சி மாநகரத்தில் நான்கு சக்கர வாகனத்தை திருடிய வழக்கு உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 22 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
எனவே சகாய ஆரோக்கிய தர்மராஜ், தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி மத்தியச் சிறையில் உள்ள சகாய ஆரோக்கிய தர்மராஜுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.