Published on 27/02/2021 | Edited on 27/02/2021

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திமுகவினர் திருவாரூர் நகரத்தில் சைக்கிள் பேரணி நடத்தி மக்களிடம் விழிப்புனர்வுப் பிரச்சாரம் செய்தனர். தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துவருகிறது. அதேபோல ஒரே மாதத்தில் 100 ரூபாய் வரை கேஸ் விலை உயர்ந்துவிட்டது. இதனைக் கண்டித்து நாடுமுழுவதும் பொதுமக்களும், சமுக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
அந்தவகையில், திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், திருவாரூர் நகரத்தில் 100க்கும் மேற்பட்டோர் சைக்கிள் பேரணியாகச் சென்றனர். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணி தெற்குவீதி, நேதாஜி சாலை, கடைவீதி, பழைய பேருந்து நிலையம், வடக்கு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.