இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில தலைவர் காதர்மொய்தீன் இன்று ஆகஸ்ட் 12ந்தேதி மாலை ஒரு நிகழ்ச்சிக்காக வேலூர் மாவட்டம் ஆம்பூருக்கு வருகை தந்திருந்தார். கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடலுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய காதர்மொய்தீன், திமுக தலைவர் கலைஞர் தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர். ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியவர், சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக இருந்தார். கலைஞருக்கு பாரதரத்னா விருதை வழங்க வேண்டும்மென கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். அவரின் சாதனைக்கு மத்தியரசு நிச்சயம் பாரதரத்னா வழங்க வேண்டும்.
இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும். இதனால் பொருளாதார இழப்பு சரி செய்யப்படும். உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் எல்லாமே ஒரே நேரத்தில் நடத்த வேண்டும். அது முடியாத காரியமும் அல்ல. அமெரிக்கா போன்ற பல வல்லரசு நாடுகள் தங்கள் நாடுகளில் ஒரே தேர்தலில் 11 வாக்குகளை செலுத்தும் வகையில் தேர்தலை நடத்துகிறது. மக்களும் சிறப்பாக வாக்களிக்கிறார்கள். அங்கு சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. அதேப்போல் இந்தியாவிலும் செயல்படுத்த வேண்டும் என்றார்.