நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா நோய் தாக்கத்தால் சிகிச்சை பெறுவதற்கான படுக்கை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், கடந்த மூன்று நாட்களாக தினமும் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (15.05.2021) 1,300 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 1,550 என நோயாளிகள் எண்ணிக்கை கூடியுள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் இல்லாமல், ஆம்புலன்ஸிகளிலேயே நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சாதாரண படுக்கைகளின் எண்ணிக்கையும் குறைவாக உள்ள நிலையில், தற்போது கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டுமென்றும், கூடுதலாக படுக்கைகள் இருந்தால் மட்டுமே நோயாளிகளைக் காப்பாற்ற முடியும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தினமும் 10க்கும் மேற்பட்டோர் இறக்கும் நிலையில், ஆக்சிஜன் வசதி இல்லாமல் நோயாளிகள் இறக்கும் அவலநிலை தற்போது ஏற்பட்டுள்ளது.