Skip to main content

“பங்காரு அடிகளார் சமூக நீதிப் போராளி” - தொல். திருமாவளவன் 

Published on 23/10/2023 | Edited on 23/10/2023

 

“Bangaru Adikalar social justice warrior” - Tol. Thirumavalavan

 

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கி புகழ் பெற்றவர் பங்காரு அடிகளார் (வயது 82). இவர் மாரடைப்பு காரணமாக கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்களும் பங்காரு அடிகளாருக்கு இரங்கல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அரசு மரியாதையுடன் மேல் மருவத்தூர் கோவிலுக்குள்ளேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

 

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் இன்று(23.10.2023) பங்காரு அடிகளாரின் மறைவுக்கு அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனிடையே பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு ஆறுதல் கூறுவதற்காக மேல்மருவத்தூர் வந்துள்ளனர். ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து திருமாவளவன் கிளம்பும் போது, ஒரே நேரத்தில் அண்ணாமலையும், எல்.முருகனும் திருமாவளவனும் நேரில் பரஸ்பரம் சந்தித்து கைக்குலுக்கிக்கொண்டனர். அப்போது திருமாவளவன் அண்ணாமலையிடம் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார். அப்போது அண்ணாமலையுடன் கேசவ விநாயகமும் வந்திருந்த நிலையில் அவரையும் திருமாவளவன் சந்தித்து நலம் விசாரித்தார். 

 

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “பாலின சமத்துவத்துக்காக ஆன்மீகத் தளத்தில் அடிகளார் ஆற்றிய பணிக்காக அஞ்சலி செலுத்துகிறோம். மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டுக்கு வெளியே நிற்க வைக்கின்ற காலத்தில், கோயில் கருவறைக்குள் பூஜை செய்யலாம் என்பதை நடைமுறைப்படுத்தி காட்டியவர் அவர். சமூக நீதிப் போராளியாகவே பங்காரு அடிகளாரை பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்