
கரோனா தொடங்கிய மார்ச் மாதம் முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை திருமண மண்டபங்களில் திருமணம் உட்பட நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதித்திருந்தது மத்திய மாநில அரசுகள். அதன்பின்னர், வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் நவம்பர் 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் திருமண மண்டபங்களில் திருமணம் தவிர மற்ற நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருக்கிறது. வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என அறிவித்துள்ளார் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம்.
இதுக்குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவன்அருள், தீபாவளியை முன்னிட்டு திருமண மண்டபங்கள், பொது இடங்களில் அரசியல், மதம் மற்றும் இதர பொது நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.
திருமண மண்டபங்களில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் திருமண மண்டபங்களில் பல நிகழ்வுகளில் அதனை மீறியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் மண்டபங்களில் அரசியல், மதம் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகள் நடத்திட தடை விதிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார். இதுபோன்றே பல மாவட்ட ஆட்சித்தலைவர்களும் அறிவித்துள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.
இதுபற்றி மண்டப உரிமையாளர்கள் தரப்பில் பேசியபோது, திருமணம் உட்பட எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அரசின் நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதைச் சரியாகக் கடைப்பிடிக்கிறோமா என எந்தத் துறை அதிகாரியும் வந்து ஆய்வு செய்ததில்லை. அப்படியிருக்க ஆய்வு செய்ததன் அடிப்படையில் தடை விதிக்கிறோம் எனச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என்கிறார்கள்.

தி.மு.க தான் அதிகளவில் மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்திவருகின்றன. திமுகவின் நிகழ்ச்சிகளைத் தடுக்கவே அ.தி.மு.க அரசாங்கம் இப்படியொரு உத்தரவைப் பிறப்பிக்கவைத்து அரசியல் செய்கின்றன என்கிறார்கள் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள்.