இளம் ஐ.பி.எஸ். அதிகாரியான பல்வீர்சிங் தன் மீது கிரிமினல் வழக்கு பதியப்படும் என்று சொப்பனத்திலும் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். அந்த அளவுக்கு விவகாரம் சீரியஸாகியிருப்பதால் தான் அரசும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.
அம்பாசமுத்திரம் உட்கோட்டக் காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தின் முக்கியப் புள்ளியே ஏ.எஸ்.பி.யான பல்வீர்சிங் மற்றும் அவருக்குத் துணை போனவர்கள் பற்றிய தகவல்கள் வெளியேறி அதிர்வலைகளைக் கிளப்பியது. இந்த விவகாரம் வெளியானதும் இதுகுறித்து விசாரிக்க சார் ஆட்சியருக்கு அரசு உத்தரவிட்டது. அப்படி, சார் ஆட்சியர் விசாரணையில் சம்பந்தப்பட்டவர்கள் நடந்தவைகளைப் பற்றி வாக்குமூலம் கொடுத்துவிடக்கூடாது. அவர்களின் வாயை அடைத்தும், மிரட்டியும் தடுக்க வேண்டும். பற்கள் உடைபட்டது தவறிக் கீழே விழுந்ததால் ஏற்பட்டது என்று சொல்ல வைக்கப் பாடுபட்டவர்கள் தொடர்புடைய காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்களாம்.
அந்த வகையில் முதன்முதலாக மிரட்டலுக்குட்பட்டவர் ஜமீன் சிங்கம்பட்டியின் சூர்யா. கடுமையான முறையில் ரத்தம் பீறிட பற்கள் பிடுங்கப்பட்டவர். அவரை மிரட்டும் வேலையில் இறங்கிய கல்லிடைக்குறிச்சி நிலைய காவலர்கள் ஒரு சிலர் அந்தப் பகுதியின் உள்ளாட்சி அமைப்புப் புள்ளியின் உதவியை நாடியிருக்கிறார்கள். ஏனெனில் அவரது உறவினர் ஒருவர் கான்ஸ்டபிள் பணியிலிருப்பவர். அவர் மூலமாக அந்தப் புள்ளியிடம் பேச. அவரே, சூர்யாவிடம் சாதகமாகவும், மிரட்டலாகவும் பேசி நடந்தவைகளை சப்-கலெக்டரிடம் சொல்லிவிடக் கூடாது. மாற்றிச் சொல்ல வேண்டும் என்று கண்டிப்பு காட்டிய பிறகே சூர்யாவிற்கு அதற்காக 45 ஆயிரம் தரப்பட்டுள்ளதாம்.
அதன்பின் சூர்யா சப்-கலெக்டரிடம் வாக்குமூலம் அளித்த சமயத்தில் அந்த நபரும் உடனிருந்திருக்கிறாராம். மிரட்டலின் படி சூர்யாவும் நிகழ்வைத் தெரிவிக்காமல் மாற்றிச் சொல்லியுள்ளாராம். இதுபோன்று போலீசாரின் மிரட்டலால் பலர் சப்-கலெக்டரிடம் மாற்றிச் சொல்ல, ஒரு சிலர் மட்டும் நடந்தவைகளை வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இது போன்று நடந்த அனைத்து சம்பவங்களும் உளவு அமைப்பின் மூலம் மேல்மட்டம் வரை போயிருக்கிறதாம்.
அதையடுத்தே சம்பவத்தை விசாரித்து அறிக்கை தரும்படி அரசால் நியமனம் செய்யப்பட்ட விசாரணை அதிகாரியான அமுதா ஐ.ஏ.எஸ். கடந்த 10 ஆம் தேதியன்று அம்பை வட்டாட்சியர் அலுவலகத்தில் தன்னுடைய விசாரணையைத் தெடங்கினார். அப்போது, அன்றைய தினம் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் யாருமே ஆஜராகவில்லை. ஆரம்பத்தில் விசாரணை நடத்திய சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர் ஆலமிடம் அவரது விசாரணை அறிக்கையைப் பெற்ற அமுதா ஐ.ஏ.எஸ்., அவரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். அதுசமயம் பற்களைப் பிடுங்கப்பட்ட குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகத் தெரிவித்தவர், அதற்கான அறிக்கையையும் சமர்ப்பித்திருக்கிறார். இந்நிலையில் போலீசாரின் மிரட்டலுக்குப் பயந்த சூர்யா தன் இருப்பிடத்தையே மாற்றியிருக்கிறார்.
இதன்பின் ஏப். 17, 18 நாளின் போது இரண்டாம் கட்ட விசாரணைக்காக அம்பை வட்டாட்சியர் அலுவலகம் வந்த விசாரணை அதிகாரியிடம் பாதிக்கப்பட்டவர்களில், சூர்யாவின் தாத்தாவான பூதப்பாண்டியன், வி.கே.புரம் அருண்குமார் அவரது தாயார் ராஜேஸ்வரி, தூத்துக்குடியைச் சேர்ந்த கணேசன், சிவந்திபுரத்தின் மாரியப்பன், இசக்கிமுத்து இன்னொரு மாரியப்பன், வி.கே.புரம் வேதநாராயணன் உள்ளிட்ட 11 பேர் ஆஜராகி நடந்தவைகளை வாக்குமூலமாக அளித்திருக்கிறார்கள்.
அன்றைய தினம் மட்டும் விசாரணை நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்திருக்கிறது. விசாரணை மற்றும் பிற சம்பவங்கள் அனைத்தும் உளவுத்துறையினர் மூலம் மேலதிகாரி வரை தெரிவிக்கப்பட்ட நிலையில்தான், தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆலோசனையின்படி நெல்லை சரக டி.ஐ.ஜி.யான பிரவேஸ் குமார் மூலம் நெல்லை எஸ்.பி.யான சிலம்பரசனுக்கு உத்தரவுகள் போக, நெல்லை மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் அம்பை ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது கிரிமினல் பிரிவான ஐ.பி.சி. 323, 324, 336 மற்றும் 506(1) என நான்கு பிரிவின் கீழ் காயம் ஏற்படுத்தல், ஆயுதம் கொண்டு தாக்குதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், மிரட்டல் ஆகிய பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரணமானவர் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால், இது குறித்து பணி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘குற்றச்செயல் என்று வருகிறபோது ஐ.பி.எஸ். அதிகாரி என்றாலும் வழக்குப் பதிவு செய்வது நடைமுறைதான். அண்மையில் கூட ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி தன் சக பெண் அதிகாரியிடம் பாலியல் ரீதியில் தொந்தரவாக நடந்து கொண்டதால் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவைகளனைத்தும் வேறு வகையைச் சார்ந்தவை.
ஆனால், தற்போதைய சம்பவம் முழுக்க கிரிமினல். காவல்துறையின் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியே, காவல் நிலையத்தில் அத்துமீறி நடந்துகொண்டிருக்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் முன்பு நடந்ததில்லை. இதற்கு காரணம் அந்த அதிகாரிக்குப் போதிய அனுபவமின்மையே’ என்கிறார்.
பாதிக்கப்பட்ட சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டியை அவரது கிராமத்தில் சந்தித்துக் கேட்டதில், “பல் புடுங்கப்பட்ட உடனே ரெண்டு பேர் வந்து, வீட்டில் இருந்த என் பேரன் சூர்யாவை மிரட்டி சிங்கம்பட்டிக்குக் கொண்டு போனாங்க. பல்லு புடுங்கப்பட்ட விஷயத்தை விசாரிக்க வர்றவங்க கிட்டச் சொல்லக் கூடாது. மீறிச் சொன்னா உன்னைய வெளிய வராதபடி உள்ள அடச்சிறுவோம்னு மிரட்டியிருக்காக. அதுக்குப் பயந்து அவன் ஊரைவிட்டு வெளியேறிட்டாம்யா. வரல. என் பேரனுக்கு நியாயம் வேணும்னுதான் நாம் போயி விசாரிக்க வந்த அம்மாவிடம் நடந்ததச் சொல்லியிருக்கேம்யா” என்றார் வறண்ட குரலில்.
பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு 8 பற்கள் சிதைவிற்குள்ளானதில் நான்கு பற்கள் பிடுங்கப்பட்டு கடும் அவஸ்தைக்குள்ளானவர் சுபாஷ். முதன்முதலாக பல்வீர்சிங் மீது புகார் கொடுத்துள்ளவர். நேற்று அவர் விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். முன்பு ஆஜராகி தனக்கு ஏற்பட்டதை வாக்கு மூலமாகக் கொடுத்துவிட்டு வந்தார்.
அவரிடம் பேசியபோது, “எனக்கு கடுமையான பாதிப்பு. நான் புகார் கொடுத்தது எஃப்.ஐ.ஆர். ஆகியும் எனக்கு அதற்கான காப்பி தரப்படவில்லை. எனக்கு ஏற்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களின் பெயர்களை விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளேன். அவரின் விசாரணை எனக்கு முழு திருப்தி அளிக்கிறது” என்றார்.
அடுத்து மாவட்ட ஆட்சியரான கார்த்திகேயனையும் வரவழைத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா விசாரணை நடத்தியிருக்கிறார். அதன் பின் அம்பை மற்றும் வி.கே.புரம் காவல் நிலையங்களை ஆய்வு செய்த அமுதா ஐ.ஏ.எஸ் அங்குள்ள போலீசாரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்.
ஏ.எஸ்.பி.யின் மீதான கிரிமினல் வழக்கும், தீவிரமடையும் விசாரணையும் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்களின் உறக்கத்தைப் பறித்திருக்கிறது.