புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தையடுத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் விசாரணை செய்தனர்.
அப்போது வேங்கைவயல் கிராம மக்கள் அருகில் உள்ள இறையூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்குள் எங்களை அனுமதிப்பதில்லை. டீக்கடையில் இரட்டைக்குவளை முறை உள்ளது என்று கூற, உடனே பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று சாமி கும்பிட வைத்தார் ஆட்சியர் கவிதா ராமு. அப்போது சாமியாடிய சிங்கம்மாள் என்ற பெண் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் வந்ததால் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூற, உடனே கைது செய்யப்பட்டார். அதே போல கோவில் வழக்கம் என்று விளக்கம் சொன்னவர் மீதும் தீண்டாமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதே பகுதியில் உள்ள டீக்கடையில் ஆய்வு செய்து கடை முடிந்து ஒரு பாத்திரத்தில் கழுவி வைக்கப்பட்டிருந்த டீ கிளாஸ் மற்றும் சில்வர் குவளைகளைப் பார்த்து இரண்டு குவளைகள் பயன்படுத்தப்படுவதாக டீக்கடைகாரர் மூக்கையாவை கைது செய்த போலீசார் அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்தனர். தீண்டாமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்கோட்டை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி சத்யா, வழக்கறிஞர்கள் குழு அமைத்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடர்ந்து 12ந் தேதி மீண்டும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி சத்யா, சிங்கம்மாள், மூக்கையா இருவருக்கும் தலா 2 நபர் ஜாமீன் மற்றும் தலா ரூ.10 ஆயிரம் ரொக்க ஜாமீன் கொடுத்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டார். ஜாமீன்தாரர்கள் உடனடியாக இல்லாததாலும் அடுத்து நீதிமன்றம் விடுமுறை என்பதாலும் எதிர்வரும் 19ந் தேதி ஜாமீன்தாரர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு சிறையிலிருந்து அவர்கள் வெளியே வரலாம் என்று கூறப்படுகிறது.