கோவை மேட்டுப்பாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பாகுபலி எனும் அடைமொழியில் அழைக்கப்படும் காட்டுயானையை சிறிய நாய்க்குட்டி ஒன்று விரட்ட முயலும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு ஆண்டுக்குப்பின் மீண்டும் பாகுபலி எனும் காட்டுயானையின் நடமாட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மக்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் ஊருக்குள் புகும் இந்த காட்டுயானையால் இரவில் பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சம் தெரிவிக்கும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. பாகுபலி யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டால் சம்பவ இடத்திற்கு வரும் வனத்துறை ஊழியர்கள் யானையை விரட்டும் பணியில் ஈடுபடுவர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் சமயபுரம் பகுதியில் சாலையை கடந்து ஊருக்குள் புகுவதற்கு முயன்ற பாகுபலி காட்டு யானையை நாய்க்குட்டி ஒன்று சுற்றி சுற்றி குரைத்த நிலையில் வெகுண்ட காட்டுயானை அதன் கணீர் குரலில் பிளிறியதால் அந்த நாய்க்குட்டி ஓட்டம் பிடித்தது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.