மலைப் பகுதியில் உள்ள அத்தியூர் என்ற கிராமத்தில் திடீரென ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் அப்பகுதியில் பெரும் பரப்பு ஏற்பட்டது.
இன்று (08/01/2021) காலை கர்நாடகா மாநிலம், பெங்களூரிலிருந்து கொச்சின் நோக்கிச் சென்ற தனியாருக்கு சொந்தமான அந்த ஹெலிகாப்டரில் பெங்களூரூவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளர் பாரத், அவரது மனைவி ஷீலா மற்றும் ஹெலிகாப்டரின் பைலட்டான முன்னாள் ராணுவ வீரர் ஜஸ்வந்த், இன்ஜினியர் அன்கித் சிங் ஆகிய 4 பேர் பயணம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் பறந்த போது, வானிலை மோசமான நிலையில் காணப்பட்டதால், பைலட் சாதுர்யமாக செயல்பட்டு, மலைப் பகுதியில் உள்ள சோலைக் காட்டில் ஹெலிகாப்டரைத் தரையிறக்கியிருக்கிறார். அந்தியூர் கிராமத்தில் உள்ள பெருமாளம்மாள் என்பவரது சோள தோட்ட களத்தில் தான் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. பின்பு வானிலை சரியான பிறகு ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஹெலிகாப்டர் கொச்சின் நோக்கி பறந்து சென்றது.
இது குறித்து விசாரித்ததில், மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளர் கண் பரிசோதனை செய்வதற்காக பெங்களூரில் இருந்து கொச்சின் நோக்கி செல்வதற்காக ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
முன்னதாக, தங்கள் பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது குறித்து தகவல் அறிந்த மலை கிராம மக்கள், அங்கு வந்து ஹெலிகாப்டரைப் பார்த்து மகிழ்ந்தனர்.