சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விழுப்புரம் அருகே நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை தனியாகப் பிரிந்து செல்கிறது. இந்தச் சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கத்திற்காக விவசாய விளை நிலங்களை அரசு கையகப்படுத்தியுள்ளது. அந்த நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததைக் கண்டித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் அற்பிசம் பாளையம், சாலையம் பாளையம், ஓட்டேரி பாளையம், சுந்தரம் பாளையம், நன்னாட்ட பாளையம், ஆனங்கூர், சாமிபேட்டை. கொளத்தூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நிலம் இழந்த ஏராளமான விவசாயிகள் திரளாக வந்து கலந்துகொண்டனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு இதற்குத் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் குமார், மாவட்டச் செயலாளர் அய்யனார், மாவட்ட தலைவர் ஏழுமலை மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது பேசிய அய்யாக்கண்ணு, "நாகை மாவட்டத்தில் இழப்பீட்டுத் தொகையாக சதுர அடிக்கு 2000 ரூபாய் என்று வழங்குகிறார்கள். விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியில் சதுர அடிக்கு 2000 ரூபாய் என்று வழங்கப்படுகிறது. ஆனால், ஓட்டேரி பாளையம் உள்ளிட்ட சில கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சதுர அடிக்கு 200 ரூபாய் என்று இழப்பீடு வழங்குகிறார்கள். இப்படி விலை மதிப்பற்ற விவசாயிகளின் விளை நிலத்தைக் கையகப்படுத்திக் கொண்டு பாரபட்சமான முறையில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். உரிய இழப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தைத் தீவிரமாக நடத்தப் போவதாக" அய்யாக்கண்ணும் பாதிக்கப்பட்ட விவசாயிகளும் கொந்தளிப்புடன் தெரிவித்தனர்.