இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கே.கங்கா மற்றும் மாநில பொதுச்செயலாளர் த. ஆறம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியச் சமூகத்தில் ஊடாடிக் கிடக்கும் ஆழமான சமூகப் பிரிவினைகளை மாற்றிடவும், வர்க்க மற்றும் சாதியப் பிளவுகளைத் தகர்த்தெறியவும் இசை என்ற மகத்தான ஊடகத்தைப் பயன்படுத்துவதோடு, இசையை எல்லா மக்களுக்குமான ஒன்றாக ஆக்கிடும் நோக்கத்தோடு பல்லாண்டுகளாக பாடுபட்டு வரும் இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா 2016 இல் ஆசியாவிலேயே மிகப்பெரிய விருதான ரமோன் மகாசேசே விருதைப் பெற்றவர்.
இவர் ஒரு சிறந்த கர்நாடக இசைப் பாடகர், இசை அமைப்பாளர், இசை ஆய்வாளர், எழுத்தாளர், ஆற்றல் மிக்க சொற்பொழிவாளர் என்பதோடு நில்லாமல், முற்போக்கான சமூக செயல்பாட்டாளராகவும் நம் நாட்டில் வலம் வரும் ஒரு அற்புதமான கலைஞராவார். கர்நாடக சங்கீதத்தை ஒரு குறிப்பிட்ட உயர்சாதி வகுப்பினருக்கு மட்டுமே உரியது என்பதை மாற்றி, கர்நாடக சங்கீதம் அனைத்து மக்களுக்குமானது என இசையில் சமூக நீதி பேசித் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். பேச்சுக்கும் செயலுக்கும் இடைவெளி இன்றிச் செயலாற்றும் வல்லமை மிக்கவராகத் திகழ்பவர் டி.எம். கிருஷ்ணா ஆவார்.
கர்நாடக சங்கீதத்தின் பாடுபொருளாக ஸ்ரீ நாராயண குருவின் பாடல்களையும், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளையும், இஸ்லாமிய, கிறிஸ்து கடவுள்களிடம் காணும் மானுட மேன்மைகளையும் தன் இசையில் கொண்டுவந்து, மத சகிப்பின்மைக்கும், சமூக அநீதிகளுக்கும் எதிராக இசை என்ற ஆயுதம் தரித்து வலம் வருபவர். டி.எம். கிருஷ்ணாவின் கலைச் சேவையைக் கௌரவிக்கும் வகையில் சென்னை மியூசிக் அகாடமி இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை இவருக்கு வழங்க முன்வந்துள்ளது. இதன் பொருட்டு டிசம்பர் மாதம் நடைபெறும் அதன் ஆண்டு மாநாட்டிற்கு தலைமை தாங்கும் வாய்ப்பினையும் டி.எம்.கிருஷ்ணா பெற்றுள்ளார்.
இவர் தலைமை தாங்கும் மாநாட்டில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என சாதி, மத மேலாதிக்க உணர்வுடைய ஒரு சில கலைஞர்கள் அறிவித்துள்ளனர். இதனைச் சில கலைஞர்கள் வரவேற்கவும் செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் எதிர்வினை ஆற்றும் போது, அவர்கள் பயன்படுத்திய வாசகங்கள் ஜனநாயக மாண்புகளுக்கு முற்றிலும் புறம்பாக இருக்கின்றன. உண்மையைச் சொன்னால், கலைஞர்களாக அறியப்படுகிற இவர்கள் தங்களின் சாதிய வன்மத்தையும், மத துவேசத்தையும் தம் வாசகங்கள் மூலமாகப் பச்சையாகக் கக்கியுள்ளனர் என்றே சொல்ல வேண்டும். இவ்வாறு தங்களின் சகிப்பின்மையைப் பகிரங்கமாகக் காட்டும் அதே நேரத்தில், தந்தை பெரியார் குறித்தும் வேண்டுமென்றே உண்மைக்குப் புறம்பான அவதூறுகளையும் பரப்பியும் வருகிறார்கள்.
இந்த அநாகரீகமான போக்கினை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. கலையும் இலக்கியமும் சாதி, மத, மொழி, இன அடையாளங்களைத் தாண்டி, அனைத்து மக்களுக்குமானது, மக்களின் மேன்மைக்கானது. எனவே டி. எம். கிருஷ்ணா என்ற அற்புதமான கலைஞனை அவதூறு செய்யும் நோக்கில் செய்யப்படும் பிரச்சாரத்துக்கு எதிராக கலைஞர்களும், எழுத்தாளர்களும், முற்போக்கு ஜனநாயக உலகமும் கிளர்ந்து எழுந்து, இந்த விஷமத்தனத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் அறைகூவல் விடுக்கிறது." என தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.