கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு, கலைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிறார்களிடையே மறைந்து கிடக்கும் கலைத் திறன்களை வெளிக்கொணரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை மற்றும் ஓவியம் ஆகிய நான்கு கலைப் பிரிவுகளில், 5 வயது முதல் 8 வயது வரையிலும், 9 வயது முதல் 12 வயது வரையிலும், 13 வயது முதல் 16 வயது வரையிலும் என 4 பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் முதல் பரிசு பெற்றவர்களிடையே 9 வயது முதல் 12 வயது வரையிலும், 13 வயது முதல் 16 வயது வரையிலும், மாநில அளவில் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவிக்கப்பட உள்ளது.
9 வயது முதல் 12 வயது வரையிலும், 13 வயது முதல் 16 வயது வரையிலும் உள்ள பிரிவுகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற சிறார்களுக்கு மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடத்தி, பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. அந்த வகையில், முதற்கட்டமாக 5 வயது முதல் 8 வயது வரையிலும், 9 வயது முதல் 12 வயது வரையிலும், 13 வயது முதல் 16 வயது வரையிலும் என்ற மூன்று வகைப் பிரிவில் சென்னை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் குரலிசை ஆகிய கலைப் போட்டிகளும், ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று ஓவிய கலைப் போட்டியும் நடைபெறவுள்ளன. கலைப் போட்டிகள் அனைத்தும் சென்னை இராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலையிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளன.
பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை ஆகிய கலைப் போட்டிகளின் 5 வயது முதல் 8 வயது வரையிலும், 9 வயது முதல் 12 வயது வரையிலும் உள்ள மாணவ, மாணவியருக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும், 13 வயது முதல் 16 வயது வரையிலும் உள்ள மாணவ, மாணவியருக்கு பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், ஓவியப் போட்டிகள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும் நடைபெறும். போட்டிகளில் கலந்து கொள்ளும். மாணவ, மாணவிகளின் பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் பெயர் ஆகிய விபரங்களுடன் பிறப்புச் சான்றிதழ் கொண்டு வரவேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும், மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.