Skip to main content

அனுமதி அட்டையை வைத்து விதிமீறுவோர்...  செய்வதறியாது திகைக்கும் காவல்துறை!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020

கரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற அரசும், அதிகாரிகளும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதனடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது மூன்று விதமான கலரில் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.'


இந்த அட்டை ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் கொடுக்கப்பட்டன. இதன்மூலம் மக்கள் நடமாட்டம் குறையும், நோய் பரவல் தடுக்கப்படும் என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் சமூக இடைவெளி குறைந்து மக்கள் அதிக அளவில் சாலைகளிலும் கடைகளிலும் கும்பல், கும்பலாக கூட ஆரம்பித்துவிட்டார்கள். 

 

ARIYALUR POLICE

 

இதுசம்பந்தமாக காவல்துறை செய்வதறியாமல் திகைத்து நிற்பதாக கூறப்படுகின்றது. இந்த அட்டை வழங்கும் விவகாரம் தோல்வியாக கருதப்படுகிறது. காரணம் அரியலூர் மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 28 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளதாகவும், அதனடிப்படையில் அந்தந்த கிராம ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் மூலமாக மேற்படி அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையை எடுத்துக் கொண்டு பலரும் தினசரி குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க வருவதாகக் கூறிக்கொண்டு அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, உடையார்பாளையம், திருமானூர் போன்ற நகரங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்க செல்வதாக டூவீலர்களில் சென்றுவந்த வண்ணம் உள்ளனர். காரணம் இந்த அட்டையை வீட்டுக்கு, வீடு கொடுத்துள்ளதால் ஒரே குடும்பத்தில் இந்த அட்டையை மாற்றி, மாற்றி பயன்படுத்தும் நிலை உள்ளது என்றும், ஏற்கனவே காவல்துறை மக்கள் நடமாட்டத்தை வெகுவாக கட்டுப்படுத்தி வைத்திருந்தது. ஆனால் இந்த அட்டை வழங்கப்பட்ட பிறகு அந்தக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து மக்கள் கூட்டம் அதிகரித்து வெளியே செல்வதும் வருவதுமாக உள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 

nakkheeran app



இதேபோன்று அட்டை வழங்கி குடும்பத்தில் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் சென்று வருவதற்காக அரியலூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டது போன்ற அனுமதி அட்டை நடைமுறையை,  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்களும், கடலூர் நகராட்சி ஆணையர் அவர்களும் செயல்படுத்த முடிவு எடுத்துள்ளனர். இதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் உள்ளன, இந்த அட்டையைப் பயன்படுத்தி மக்கள் அதிக அளவில் வெளியே வருவதற்கும், போவதற்கும் வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது. அது அரியலூர் மாவட்டத்தில் பகிரங்கமாக தெரியவருகிறது. கும்பல் அதிகமாக நடமாடுவது கண்டு மாவட்ட நிர்வாகம்  காவல்துறை அதிகாரிகளிடம் கேட்கும்போது, அனுமதி அட்டையை காட்டியபடி செல்கிறார்கள், அவர்களை நாங்கள் எப்படி தடுப்பது என்று காவல்துறை கூறுகிறது.

எனவே இந்த அனுமதி அட்டை வழங்கும் விவகாரத்தில் இன்னும் கூடுதலான கவனம் மிகுந்த கட்டுப்பாடு செலுத்தி, ஒரு குடும்பத்தில் ஒருவர், வாரத்தில் ஒருநாள் மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே சென்று வரலாம் என்று உத்தரவிட்டாலும்கூட, அதில் சம்பந்தப்பட்ட குடும்ப தலைவர் புகைப்படம் ஒட்டப்பட வேண்டும், அட்டையோடு வெளியே வரும்போது காவல்துறை அந்த அட்டையில் தேதி குறிப்பிட்டு சீல் வைக்க வேண்டும், இப்படி செய்தால்  ஒரு அட்டையை பயன்படுத்தி பலர் அடிக்கடி வெளியே வருவதை தடுக்க முடியும் எனவே மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் இந்த அனுமதி அட்டை வழங்கும் விவகாரத்தில் மிகவும் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்