Skip to main content

புளி பறிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம்; கொலையில் முடிந்த சோகம்!

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

ariyalur jayankondam ilaiur samaveli tamarind fruit incident

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் சமவெளி என்ற பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருக்கு ராமச்சந்திரன், ராஜேந்திரன், சங்கர் என மூன்று மகன்களும் மணிமேகலை, சசிகலா என இரண்டு மகள்களும் என மொத்தம் ஐந்து பிள்ளைகள். அனைவருக்கும் திருமணமாகி அவரவர்க்கு சொத்துக்களை பிரித்துக் கொடுத்து தனித்தனியே வசித்து வருகிறார்கள்.

 

இந்நிலையில் புளியமரத்தில் பழம் பறித்து பங்கு பிரிப்பது சம்பந்தமாக சங்கர் மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரனுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. சங்கருக்கு ஒதுக்கப்பட்ட புளியமரத்தில் ராஜேந்திரன், அவரது மகன் கவுண்டன், மகள் கவிதா ஆகிய மூவரும் பழம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சங்கர் சகோதரர் ராஜேந்திரனிடம், “எனக்கு சொந்தமான புளியமரத்தில் ஏன் பழம் பறிக்கிறீர்கள்” என்று கேட்டுள்ளார்.

 

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜேந்திரன், கவுண்டன், கவிதா ஆகிய மூவரும் சங்கரை கடுமையாகத் தாக்கியதால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜேந்திரன், கவுண்டன், கவிதா ஆகிய மூவரையும் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்