அணவயல் கிராமத்தில் கஜா புயலில் அழிந்த மரங்களை மீட்கும் முயற்சியாக ஒரு வாரந்தோறும் மரக்கன்று நடும் பணியை இளைஞர்கள் தொடங்கியுள்ளனர். ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது என்று முடிவெடுத்து அதற்காண தொடக்கவிழா அரசு பள்ளி வாளகத்தில் நடந்தது.
நவம்பர் 16 ந் தேதி அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், அணவயல், மாங்காடு, வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் கஜா புயல் தாக்கியதில் மா, பலா, வாழை, தென்னை, தேக்கு, புளி, சந்தனம் என்று பலவகை மரங்களும் ஒடிந்து சாய்ந்தது. ஆலமரம், அரசமரங்களும் சேதமடைந்தது. பல இடங்களில் அடியோடு சாய்ந்தது. பல வருடங்களாக காப்பாற்றி வந்த வந்த மரங்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஆனாலும் விரைவில் அத்தனை மரங்களையும் மீட்டெடுப்போம் என்ற மன உறுதி இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் கிராமத்தில் இளைஞர்கள் ஒன்றிணைந்து கிராமத்தில் உள்ள சாலைகள், பொது இடங்கள், பள்ளிகள், கோயில் வளாகங்களில் பலன் தரும் மரங்களை வளர்க்க முடிவெடுத்துள்ளனர்.
அதன் தொடக்கவிழா அணவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது. முதல் கன்றுகளை பள்ளி வளாகத்தில் நட்டு தொடங்கி வைத்தனர். அடுத்தடுத்து ஒவ்வொரு பகுதியிலும் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கியுள்ளனர்.
இது குறித்து அணவயல் கிராம இளைஞர்கள் கூறும் போது.. கஜா புயலால் அதிகமாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் அணவயல் கிராமமும் ஒன்று. சாலை ஓரங்களில் பழமையயான அரச மரம், புளிய மரங்கள் நிறைய இருந்து புயலில் சாய்ந்து தற்போது சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அதே போல பொது இடங்களில் உள்ள மரங்களும் சாய்ந்துவிட்டது. தனியார் தோட்டங்களில் விவசாயிகள் மரங்களை வளர்த்துக் கொள்வார்கள். ஆனால் பொது இடங்களில் மரங்கன்றுகள் வளர்க்க வேண்டும். 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் பலன் தரக் கூடிய மரங்களை நட வேண்டும் என்று இளைஞர்கள் முடிவெடுத்தோம். அதன்படி மா, பலா, நெல்லி, புளி, வேம்பு, புங்கன், மகிழம், போன்ற மரக்கன்றுகளை சொந்த செலவில் வாங்கி வந்து நடத் தொடங்கிவிட்டோம்.
வாரத்தில் ஒரு நாள் மரக்கன்றுகள் நடுவதும் மற்ற நாட்களில் நடப்பட்ட கன்றுகளுக்கு கூண்டுகள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். மேலும் புதிதாக வைக்கப்படும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பட்டுப்போகாமல் இருக்க பாரத் பால் நிறுவனம் வாரத்திற்கு ஒரு நாள் தங்கள் நிறுவன டேங்கரில் தண்ணீர் நிரப்பி கன்றுகளுக்கு ஊற்ற முன்வந்துள்ளனர்.
அதே போல நூறு நாள் வேலை செய்யும் பெண்கள் ஒரு லட்சம் மரக்கன்றுகளையும் நாங்களே நட்டு பராமரிக்கிறோம் என்று உறுதியளித்துள்ளனர் என்றனர். மேலும் இதே போல ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் இணைந்தால் கஜாவால் அழிக்கப்பட்டதைவிட அதிகமான மரங்களை வளர்த்துவிடலாம் என்றனர். இளைஞர்களின் முயற்சியை கிராமத்தினர் பாராட்டினார்கள்.