திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஐப்பசி பௌர்ணமி தோறும் குபேர லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். ஐப்பசி மாதம் துவங்கியுள்ள நிலையில் லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையைப் பெறுகிறது. இதனைத் தரிசிப்பதால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தைத் தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 40 படி அரிசியால் சாதம் சமைத்து கோவிலின் தெற்கு கோபுரம் அருகில் உள்ள குபேர லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் பஞ்ச பிரகாரத்தைச் சுற்றி கிரிவலம் வந்தனர். பின்னர் குபேர லிங்கத்தின் அன்ன அலங்காரம் கலைக்கப்பட்டு சுவாமி மேல் அலங்கரிக்கப்பட்ட அன்னத்தைத் தனியாக வைத்துவிட்டு மீதமுள்ள அன்னத்தைப் பக்தர்களுக்குப் பிரசாதமாகக் கோவில் நிர்வாகம் வழங்கியது. குபேர லிங்கத்தின் மீது அலங்கரிக்கப்பட்ட அன்னம் காவிரி ஆற்றில் விடப்படும்.