அண்மையில் பொறியியல் கல்லூரி தேர்வு மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண்கள் வழங்க மாணவர்களிடம் கையூட்டு பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்து பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் தேர்வில் இந்த ஆண்டு கொடுக்கப்பட்ட வினாத்தாளில் இடம்பெற்றிருந்த 90 சதவீத வினாக்கள் அப்படியே கடந்த 2017-ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட வினாத்தாளில் இருந்த வினாக்கள் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதிலும் வரிசை எண் கூட மாறாமல் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2018 ஆம் ஆண்டு ஆண்டு ஆறாம் பருவத்தேர்வில் கொடுக்கப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பாடபிரிவின் வினாத்தாளில் இருந்த இரண்டு மதிப்பெண் மற்றும் 13 மதிப்பெண் வினாக்கள் என இரண்டிலும் 90% சதவீத வினாக்கள் அப்படியே 2017 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட வினாத்தாளில் இருந்தததே வந்திருந்தது. இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுபற்றி அண்ணா பல்கலைகழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்ச்சைக்குரிய எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பாடப்பிரிவின் சம்பந்தப்பட்ட அந்த தேர்வு திரும்பவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த தவறு எப்படி நடந்தது என்பது பற்றி விசாரிக்க சிறப்பு குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதுபற்றி கல்வியாளர்கள் கூறுகையில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும் முன்னரே 4 மாதிரி வினாத்தாள்கள் உருவாக்கப்படும். அதில் ஏதாவது ஒன்றுதான் மாணவர்களுக்கு தேர்வு எழுத வழங்கப்படும். அப்படி இருக்க இது போன்று எப்படி நடந்திருக்கும். இதை தற்செயலாக ஏற்க முடியாது. இதுபற்றி விசாரித்தால் கண்டிப்பாக பெரிய உண்மைகள் வெளிவர வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறுகின்றனர். அதேபோல் சில தனியார் கல்லூரி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற கல்லூரிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு இது போன்று வினாத்தாள்களை உருவாக்கி இருக்கலாம் எனவும் விமர்சிக்கின்றனர் கல்வியாளர்கள்.