சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கை சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த குழுவின் பரிந்துரை பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) வெளியானது சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அதே சமயம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், எழும்பூரில் உள்ள சிறைத்துறை அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிறையில் உள்ள ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை தொடங்கியுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் கூடத்தில் ஞானசேகரனிடம் இந்த குரல் பரிசோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஞானசேகரன் சில நபர்களிடம் நடத்திய உரையாடலை உறுதிப்படுத்த இந்த குரல் மாதிரி பரிசோதனை நடைபெறுகிறது எனக் கூறப்படுகிறது.