இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்தியது. அதன்படி, 104 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியது. பல்வேறு மாகாணங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவின் ராணுவ விமானத்தில் அனுப்பப்பட்டனர். அதில் டெக்காசில் இருந்து புறப்பட்ட சி-17 விமானத்தில் 104 இந்தியர்கள் இருந்தனர். இந்த விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (05.02.2025) தரையிறங்கியது. முன்னதாக பயணம் முழுவதும் கால்களில் சங்கிலி மாட்டியும், கைகளில் விலங்குகள் இட்டும் விமானத்தில் இந்தியர்கள் பயணித்தனர் எனத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான படங்களும் வெளியாகியிருந்தன. இந்த விவகாரத்தில், இந்தியர்கள் கண்ணியக்குறைவாக நடத்தப்பட்டதாகக் காங்கிரஸ் குற்றச்சாட்டியது. மேலும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு நாடாளுமன்றத்தில் இது குறித்து இன்று (06.02.2025) விவாதம் நடத்தக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதோடு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் மாநிலங்களவை மீண்டும் கூடியது. அப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “வெளிநாட்டில் சட்டவிரோதமாக வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தங்கள் நாட்டவர்களை திரும்பப் பெறுவது அனைத்து நாடுகளின் கடமையாகும். அமெரிக்காவால் நாடு கடத்தப்படுவது குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) அதிகாரத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. 2012 முதல் நடைமுறையில் உள்ள குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையினர் விமானம் மூலம் நாடு கடத்தப்படுபவர்களின் கைகளில் விலங்கு பயன்படுத்தப்படுவதற்கு விதிகளை வழங்குகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கைகளில் விலங்கு பயன்படுத்தப்படுவதற்கு எந்த விதிமுறைகளும் இல்லை என்று குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை மூலம் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு கடத்தப்பட்டவர்கள் எந்த வகையிலும் தவறாக நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த அமெரிக்க அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொண்டோம். அதே நேரத்தில், சட்டவிரோத குடியேற்றத் தொழிலுக்கு எதிரான வலுவான அடக்குமுறையில் நமது கவனம் இருக்க வேண்டும் என்பதை சபை பாராட்டுகிறது. நாடு கடத்தப்பட்டவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், முகவர்கள் மற்றும் அத்தகைய ஏஜென்சிகளுக்கு எதிராக சட்ட அமலாக்க முகவர் தேவையான, தடுப்பு மற்றும் முன்மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கும். மேலும் இந்தியர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திரும்பி அனுப்பப்படும் இந்தியர்களை, மரியாதையுடன் நடத்த கோரிக்கை அமெரிக்காவிற்கு விடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.