தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இத்தகைய சூழலில் தான், துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழு தொடர்பான விவகாரத்தைச் சேர்த்து விசாரிக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில் யு.ஜி.சி. பிரதிநிதியைச் சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவுறுத்தினார். ஆனால், யு.ஜி.சி. பிரதிநிதியை விடுத்து 3 உறுப்பினர்களைக் கொண்ட தேடுதல் குழுவை அமைத்து தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், யு.ஜி.சி பிரதிநிதியைச் சேர்த்துத் தேடுதல் குழுவைச் சேர்க்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று (04.02.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வாதிடுகையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் சட்டப்பேரவையில்தான் சட்டங்கள் அனைத்தும் இயற்றப்படும். அதுதான் சாத்தியமானது. அதே சமயம் ஆளுநர் மாளிகையில் ஒருபோதும் சட்டங்கள் இயற்றவே முடியாது என்பதை நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் சுட்டிக்காட்டி இருக்கின்றன.
ஆளுநர் என்பவரின் அதிகாரம் குறித்த கேள்விகளை எழுப்பி அதனைச் சரி செய்தும் வைத்திருக்கின்றன நமது நீதிமன்றங்கள். ஒரு மாநில அரசானது மத்திய அரசின் பட்டியலில் உள்ள துறை சார்ந்து ஒரு சட்டம் இயற்றுகிற போது அதனை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. அதனை நாம் மறுக்க முடியாது. அதே நேரத்தில் பொதுப்பட்டியல் அல்லது மாநில அரசின் பட்டியல் உள்ள துறை சார்ந்த ஒரு மசோதாவை மாநில சட்டப்பேரவை நிறைவேற்றினால் அதை ஆளுநரால் நிறுத்தி வைக்கவே முடியாது. ஏனெனில் ஆளுநர் என்பவர் மாநில சட்டப்பேரவைகள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது அறிவுரை அல்லது ஆலோசனை கூறுகிற ஒரு ஆலோசகர் தான். ஆளுநர் என்பவர் சட்டங்கள் மீது முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் கொண்டவர் அல்ல. பொதுவாக மாநில சட்டப்பேரவைகள் நிறைவேற்றுகிற மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அரசியல் சாசனம் என்பது ஆளுநர் தரப்பு வாதம்.
அதே நேரத்தில் மாநில அரசின் மசோதாவை நிராகரிக்கத் திருப்பி அனுப்பக் காரணம் என்ன என்பதைத் தெரிவிக்கவும் சொல்கிறது அதே அரசியல் சாசனப் பிரிவின் மற்றொரு உட்பிரிவு. ஆனால் ஆளுநர் தரப்பு, மசோதாக்களை பொதுவாகக் கிடப்பில் போட்டுவிட்டு மவுனமாகிவிடுகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தின் 200வது சட்டப் பிரிவின் கீழ் முடிவெடுக்கும் போது ஆளுநர் தரப்பு மாறுபட்ட நிலைப்பாட்டை மேற்கொள்கிறது. ஆளுநர் என்பவர் அரசியல் சாசனம் மற்றும் மாநில அமைச்சரவையின் முடிவின் படியே செயல்பட முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.