தமிழகத்தில் மதுவுக்கு ஆதரவாகத் திட்டமிட்டுச் செய்யப்படும் பரப்புரைகள் கண்டிக்கத்தக்கவை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு காரணமாக கடந்த 25 நாட்களுக்கும் மேலாக மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதன் பயனாக, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற சூழல் உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலை சீர்குலைக்கும் வகையில், மது இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விட்டதைப் போன்று முன்னெடுக்கப்படும் பரப்புரைகள் கண்டிக்கத்தக்கவை.
உயிரைப்பறிக்கும் கரோனா வைரஸ் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும். பொறுப்பும் அனைத்துத் தரப்பினருக்கும் உள்ளது. மற்றவர்களை விட ஊடகங்களுக்கு இந்தப் பொறுப்பு இன்னும் கூடுதலாக உள்ளது. அதன்படி தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்களும், செய்தித் தாள்களும் கரோனா தடுப்பு விழிப்புணர்வுக்காக அதிக நேரத்தையும், இடத்தையும் ஒதுக்குகின்றனர். இத்தகைய அணுகுமுறையும், பொறுப்புணர்வும் பாராட்டத்தக்கவை. அதேநேரத்தில் சில ஊடகங்களிலும், செய்தித் தாள்களிலும் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த மாநிலமும் தள்ளாடுவதாகவும், அதிக அளவில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகவும் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பரப்புரைகள் என்பதில் ஐயமில்லை.
தமிழ்நாட்டில் கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 25 நாட்களுக்கும் மேலாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் கடந்த 2018-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வுகளில் தமிழகத்தில் 1.50 கோடி பேர் மதுப்பழக்கத்திற்கு ஆளாகியிருப்பதாகவும், அவர்களில் நான்கில் ஒருவருக்கு அதாவது 37.50 லட்சம் பேருக்கு போதையிலிருந்து விடுதலையாக ஆலோசனைகள் தேவைப்படுவதாகவும் தெரியவந்தது. மதுவுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகமாக உள்ள மாநிலத்தில் ஏதேனும் ஒரு சிலர் மாற்று போதைக்கு முயற்சி செய்திருக்கலாம். இன்னும் சிலர் சாகசத்திற்காகக் கூட அவ்வாறு செய்திருக்கலாம். தமிழகத்தில் மது ஆறாக ஓடிய காலத்திலும் கூட, இத்தகைய செயல்கள் நடைபெற்றுள்ளன. அவை சமூகநலன் கருதி புறக்கணிக்கப்பட வேண்டியவை.
ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மதுவுக்கு அடிமையான எவரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், அப்பிரிவுகளை இதுவரை ஒருவர் கூட நாடவில்லை என்பது தான் மனநிறைவளிக்கும் விஷயமாகும். மது இல்லாத சூழலை ஏற்றுக்கொள்ள மதுவுக்கு அடிமையானவர்கள் கூட பழகிவிட்டனர் என்பதையே இது காட்டுகிறது.
மதுக்கடைகள் மூடப்பட்டதற்குப் பிந்தைய சில நாட்களுக்கு மது அருந்தாமல் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், அதன்பின்னர் யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றின் உதவியுடன் இயல்பு நிலைக்கு வந்து விட்டதாகவும் மதுவுக்கு அடிமையான பெரும்பான்மையான இளைஞர்கள் கூறியுள்ளனர். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செய்திகளும் பல ஊடகங்களில் வெளியாகியுள்ளன. மது அருந்தாமல் இருப்பதால் புத்துணர்வை உணர முடிவதாக பல இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இது அவர்களின் வாழ்க்கையில் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுவிலிருந்து மீண்ட இளைஞர்கள் புதிய உற்சாகத்துடன் பணியாற்றினால், அது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
தமிழகத்தில் மது இல்லாமலும் வாழ முடியும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், மதுவிலக்குக்கு ஆதரவான குரல்கள் இனி அதிகரிக்கும்; அது விரைவில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கும். அத்தகைய நிலை ஏற்பட்டால், அதனால் மது ஆலைகள் மூடப்பட்டால் பொருளாதார அடிப்படையில் பாதிக்கப்படக்கூடியவர்கள் தான் இத்தகைய பிரச்சாரங்களைத் தூண்டி விடுகின்றனர். உண்மை நிலை அறியாமல் ஊடகங்களும் இந்தச் சதிக்குப் பலியாவது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கும் பெரும் தடையாக இருப்பது மது ஆகும். இதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. மதுவை ஒழித்து, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 39 ஆண்டுகளாகப் போராடி வருகிறார். எனவே, தமிழகத்தின் அனைத்துத் தரப்பினரும் இந்த உண்மையை உணர்ந்து, மது இல்லாத தமிழகம் காணும் பா.ம.க.வின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்''. இவ்வாறு கூறியுள்ளார்.