Skip to main content

“விஜயகாந்த் உயிரிழந்துவிட்டார் என்பதை தாங்க முடியவில்லை” - அன்புமணி ராமதாஸ் இரங்கல்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Anbumani Ramadoss obituary for Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மூத்த மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வந்தனர். அதில்,‘மருத்துவ பரிசோதனையில், விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இந்த செய்தியறிந்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். மேலும், விஜயகாந்த்தின் உடலை மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு குவிந்திருந்த பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலக பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தே.மு.தி.கவின் நிறுவனரும், தலைவருமான அன்புச் சகோதரர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி, அனைவரின் மனங்களையும் வென்றவர் விஜயகாந்த்.  

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, அதன் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தவர். அதன்பின் 2005ஆம் ஆண்டில் தேமுதிக என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கி, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயர்ந்த நிலையை அடைந்தவர். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவர் மீதும் எனக்கு மிகுந்த அன்பு உண்டு. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட எனக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டவர். 

கடந்த 2019ஆம் ஆண்டில் அவர் உடல்நலம் பாதித்திருந்த போது அவரை மருத்துவர் ராமதாஸுடன் சேர்ந்து நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பும், உறவும் இயல்பானதாக தொடர்ந்தது. அரசியலையும், திரைவாழ்வையும் கடந்து விஜயகாந்த் மிகவும் அற்புதமான மனிதர். அனைவரையும் சமமாக மதித்தவர். அனைவரிடமும் அன்பு காட்டியவர். உடல்நலக் குறைவால் ஒவ்வொரு முறையும் மருத்துவமனையில் அனுமதிகப்படும் போது, அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதும், உடல்நலம்  தேறி வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்துவதும் வழக்கம்.

இப்போதும் வழக்கமான மருத்துவ ஆய்வுக்காகவே மருத்துவனையில் அவர் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிந்த நிலையில், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்; அரசியல் பணியை தொடர்வார் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், எதிர்பார்ப்பிற்கு மாறாக அவர் உயிரிழந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை; தாங்க முடியவில்லை. அவரை இழந்து வாடும் தேமுதிக பொதுச்செயலாளரும், மனைவியுமான சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள்  உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்