பண்டிகை தினங்களில் சொந்த மாநிலத்திற்குச் செல்ல முடியாமல் தவிக்கும் வட இந்திய இளைஞர்களைக் குறி வைத்து, இளைஞர் ஒருவர் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் போலி ரயில் டிக்கெட் கொடுத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமாநிலத் தொழிலாளர்கள் பண்டிகை நாட்களில் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிவார்கள். அந்த நேரத்தில் பலரது டிக்கெட்டுகள் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும். அப்படி வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் நபர்களைக் குறிவைத்து உங்களுக்கு சீட்டை கன்ஃபார்ம் பண்ணித் தருகிறேன் எனக்கூறி ஒருவர் மோசடி செய்துள்ளார்.
நேற்று மதியம் சென்ட்ரல் புறநகர் முன்பதிவு மையம் பகுதியில் கையில் நோட்பேட், ரப்பர் ஸ்டாம்ப் உடன் நின்ற இளைஞர் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஜேந்திர ஜா என்று தெரியவந்தது. அவருக்கு இந்தி தெரியும் என்பதால் வட மாநிலப் பயணிகளைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். கொடுங்கையூரில் வசித்து வரும் அவரின் வீட்டுக்குச் சென்ற ரயில்வே போலீசார் ஆய்வு செய்ததில் பல ரப்பர் ஸ்டாம்புகள் நோட் பேட் ஆகியவற்றைப் பார்த்து அதிர்ந்தனர்.
அந்த இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ட்ரெயின் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாமல் தவிக்கும் வட மாநில இளைஞர்களைக் குறி வைத்து, தான் ரயில்வே துறை அதிகாரி என அறிமுகம் செய்து கொள்வதோடு, துண்டு பேப்பரில் பயணிகளின் பெயர், விவரம், வயது, ரயிலின் பெயர், சீட்டின் எண் ஆகியவற்றை மருத்துவர் மருந்து சீட்டில் எழுதுவதுபோல எழுதி எக்ஸிக்யூட்டிவ் ஆபிஸர் ஆந்திரா என்ற ஒரு சீலை வைத்துக் கையெழுத்து போட்டுக் கொடுத்து விடுவார். இதை டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினால் உங்களுடைய சீட்டு உறுதியாகிவிடும் என அனுப்பி விடுவார். இதற்கான பணத்தையும் பெற்றுக் கொள்வார்.
ஆனால், இப்படிச் செல்லும் அப்பாவிப் பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் இதைக் காட்டினால், இது செல்லாது, போலியானது என ரயிலிலிருந்து இறக்கி விடப்படுவர். இது தொடர்பாகப் புகார்கள் எழுந்த நிலையில், தற்போது அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.