கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கள்ளச்சாராய மரணம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது, ''கள்ளச்சாராயம் விற்றவர்களுடன் ஆளும் திமுகவிற்கு தொடர்பு இருப்பதால் முறையான விசாரணை நடக்காது. எனவே கள்ளச்சாராயத்தால் 56 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். 1971-ல் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தமிழகத்தில் இருந்த பூரண மதுவிலக்கை நீக்கியது திமுக அரசு தான். கள்ளச்சாராய மரணம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விவாதத்தையும் தமிழக அரசு அனுமதிக்கவில்லை.
பாஜக சார்பில் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணை செய்தால் தான் உண்மையை வெளியே வரும். மாநில அரசுக்கு இதில் உள்ள தொடர்பு காரணமாக போலீஸ் விசாரணையில் விவரங்கள் முழுமையாக வெளியே வராது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருகிறது. அரசு அமைப்பான டாஸ்மாக் வருடா வருடம் அதிக அளவில் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தில் எல்லா இடங்களிலும் மது ஆறாக ஓடுகிறது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் குடியிருப்புகள் உள்ள பகுதியிலேயே சாராயம் விற்றது மிகவும் வருந்ததக்கதாக உள்ளது. விஷச் சாராயத்தால் 56 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து கூறாதது ஏன்? ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே இதுவரை கருத்து கூறாதது ஏன்? சட்டப்பூர்வமாக மதுபானம் விற்கப்படும் தமிழகத்தில் எப்படி கள்ளச்சாராய மரணம் நேரிட்டது. இதுகுறித்து கருத்து கூறாமல் ராகுல் காந்தி எங்கே போனார்?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நிர்மலா சீதாராமன்.