
ஒரு நடிகர் படம் வெளியாகிறது என்றால் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு பஞ்சமிருக்காது. இன்று ஒரே நாளில் ரஜினியின் பேட்ட படமும் தல அஜித்தின் வஸ்வாசம் படமும் வெளியானதால் எங்கும் ஒரே பரபரப்பு. மேளதாளம், பட்டாசு, பால் அபிஷேகங்கள் வழக்கம் போல நடந்தது.

சில இடங்களில் விஸ்வாசம் ரசிகர்கள் கள்ள டிக்கெட்டில் படம் பார்த்தது முதல் கட்-அவுட் சரிந்து விபரீதம், டிக்கெட் எடுக்க பணம் தராத தந்தையை தீ வைத்த தகாத சம்பவங்களையும் தல ரசிகர்கள் செய்திருந்தாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த கிராமத்தில் மரக்கன்றுகளை வழங்கி இருக்கிறார்கள் தல ரசிகர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வடகாடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து கிராமத்திலும் புயல் பாதிப்பால் அதிகமான அளவில் மரங்கள் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடகாடு பகுதி அஜித் ரசிகர்கள் பேட்டைக்கு இணையாக பதாகைகள் வைத்தாலும் படம் வெளியான இன்று வடகாடு கடைவீதியில் மரக்கன்று நட்டதுடன் அப்பகுதி பொதுமக்களுக்கு சுமார் 3 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கினார்கள்.
இனிப்பு கொடுப்பது வழக்கம். ஆனால் விஸ்வாசம் திரைக்கு வரும் போது புயலால் மரங்களை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு எங்களால் முடிந்த ஒரு மரக்கன்று கொடுக்கிறோம் என்றனர்.