Skip to main content

பகையை உண்டாக்கிய தேர்தல்; படுகொலை செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி!

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

 AIADMK executive was incident Thanjavur

 

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதிக்கு அருகே அமைந்துள்ளது திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி. இங்குள்ள மைக்கேல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 38 வயது பிரபு. இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில், பிரபு திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலராக இருந்தவர். மேலும், அதிமுக-வில் நகர இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளராகவும், வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்தார். இத்துடன், திருக்காட்டுப்பள்ளியில் பிளக்ஸ் அடித்துக்கொடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். 

 

இந்நிலையில், அதிமுக பிரமுகர் பிரபுவிற்கும், பழமார்நேரி பகுதியைச் பாரதிராஜா என்பவருக்கும் நிலம் விற்பது தொடர்பாக கொடுக்கல் வாங்கல் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, இவர்களுக்குள் ஏற்பட்டிருந்த பிரச்சனையில் இருதரப்பினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இத்தகைய சூழலில், கடந்த 2021 ஆம் ஆண்டில் பேரூராட்சி 5வது வார்டில் அதிமுக சார்பில் பிரபு போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் பாரதிராஜாவின் ஆதரவாளரான ஓணான் பாஸ்கரன் என்பவர் போட்டியிட்டார். மேலும், நடைபெற்ற இந்த தேர்தலில் ஓணான் பாஸ்கரன் வெற்றியடைந்தார். 

 

ஏற்கனவே, இவர்களுக்குள் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுவந்த நேரத்தில், தற்போது தேர்தலில் கிடைத்த இந்த வெற்றி பிரபுவிற்கும் பாரதிராஜாவுக்கும் பகையை உண்டாக்கியுள்ளது. இதையடுத்து, இந்த தேர்தலை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டில் பிரபு தரப்பினர் பாரதிராஜா மீது கொலை முயற்சி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஒருகட்டத்தில், பிரபு மீது இருந்த கோபம், திடீரென கொலை வெறியாக மாறியுள்ளது. பாரதிராஜா தரப்பினர் ஒன்றுசேர்ந்து பிரபுவை கொலை செய்ய திட்டமிட்டனர். இத்தகைய சூழலில், கடந்த 15 ஆம் தேதி இரவு 10 மணியளவில், பிரபு பழமார்நேரி சாலையில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மக்கள் நடமாட்டமும் குறைந்த அளவில் காணப்பட்டிருந்தது. 

 

இதற்கிடையில், திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பிரபுவை சுற்றி வளைத்துள்ளது. ஒருகணம், இதனால் அதிர்ச்சியடைந்த பிரபு என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப்போன நேரத்தில், அந்த கும்பல் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை எடுத்து பிரபுவை சரமாரியாக வெட்டியுள்ளனர். அந்த சமயம், நடுரோட்டில் நடக்கும் இந்த கோர சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், அங்கிருந்து நாலாபுறமும் சிதறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன்பிறகு, பிரபுவை கொன்றுவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மேலும், இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர், உயிரிழந்த பிரபுவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு, உயிரிழந்த பிரபுவின் மனைவி சரண்யா அளித்த புகாரின் பேரில், தஞ்சாவூர் எஸ்.பி. ஆஷிஷ் ராவத் அறிவுறுத்தலின் பேரில், இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் போலீஸ் விசாரணையில் முன் விரோதம் காரணமாக பிரபு கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. அதன்பிறகு, இந்தக் கொலை சம்பவத்திற்கு காரணமான பாரதிராஜா, மணிகண்டன், ரமேஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, அந்த 5 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைக்கு பிறகு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது, பரபரப்பான சாலையில் நடந்த இந்த கோர சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்