பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடுதழுவிய போராட்டம் இன்று நடைபெறும் நிலையில், தமிழகத்தில் இன்று அரசுப் பேருந்துகள் வழக்கம்போல ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல், தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. வணிகர் சங்கங்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தொழிற்சங்கங்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் பெரும்பாலான ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படவில்லை. அதேநேரத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கி வருகிறது. அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
தமிழகத்தில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3 மணி வரை முழு அடைப்பு நடைபெறுகிறது. அதன் பிறகு மாலை 4 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் பங்கேற்கின்றன.