
விவசாய உற்பத்தி சங்கங்களிடம் இருந்து மத்திய கூட்டுறவு வங்கிகள் 2% டிடிஎஸ் வரி பிடித்தம் செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய கூட்டுறவு வங்கிகளில், விவசாய உற்பத்தியாளர்கள், விவசாயப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் சங்கங்கள் மத்திய கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளது. பயிர்க்கடன் உள்ளிட்ட விவசாயப் பணிகளுக்குத் தேவையான கடன் வசதிகளை இச்சங்கங்கள் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பெற்று கொடுக்கிறது.
இதுமட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு அரசு வழங்கும் பேரிடர் கால நிவாரணங்கள், கரோனோ நிவாரண நிதி என அனைத்தும் மத்திய கூட்டுறவு வங்கியில் உள்ள விவசாயச் சங்கங்கள் சேமிப்பு கணக்கில் செலுத்தப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது
இந்நிலையில், வருடத்துக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தாலோ, பணத்தை டொபாசிட் செய்தாலோ, அந்தப் பணத்துக்கு 2% டி.டி.எஸ். வரி பிடித்தம் செய்யப்படும். இந்த வரி விதிப்பு கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும் என வருமான வரித்துறை அண்மையில் விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது.
இந்த 2% டி.டி.எஸ். வரியை மத்திய கூட்டுறவு வங்கிகள், விவசாய கூட்டுறவு சங்கங்களின் சேமிப்பு கணக்கில் பிடித்தம் செய்வதாகவும், இந்த நடைமுறைக்குத் தடை விதிக்கக் கோரி ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை விவசாய சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, மத்திய கூட்டுறவு வங்கியில் உள்ள விவசாயச் சங்க சேமிப்பு கணக்கில் இருந்து 2% டி.டி.எஸ். வரி பிடித்தம் செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக வருமான வரித்துறை, மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோர் வரும் ஜூன் 8- ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கைத் தள்ளி வைத்தார்.