அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக் கோரிய வழக்கின் விசாரணை நாளை (15/07/2022) ஒத்திவைக்கப்பட்டது.
அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று (14/07/2022) நீதிபதி சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி, அ.தி.மு.க. அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், பாதுகாப்பு தரவில்லை என்று வாதிட்டார். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறுவது தவறு என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை முடித்த பின் காவல்துறை பதிலளிக்கலாம் என்று அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மோதல் ஏற்பட்ட போது, அதைத் தடுக்காமல் காவல்துறை அனுமதித்தது குறித்து ஆதாரம் உள்ளது. வீடியோ ஆதாரங்களைப் பார்த்தால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்தது தெரியும். சட்டம்- ஒழுங்கை காக்க காவல்துறை தவறிவிட்டது என வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதி சதீஸ்குமார், பொதுக்குழு வழக்கில் தீர்ப்பளித்த நிலையில், கட்சி அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், கட்சி அலுவலகத்திற்குள் நுழைய எந்தத் தடையும் இல்லை. வானகரத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி, எந்த சரிபார்ப்பும் இல்லாமல் என் மீது குற்றம்சாட்டியுள்ளார். பொருளாளர் என்ற முறையில் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார் என்று வாதிட்டார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கணினி, கோப்புகளை எடுத்துச் சென்றனர். அ.தி.மு.க. அலுவலகத்தை 400 பேர் முற்றுகையிட்டு எங்களை அனுமதிக்காமல் தடுத்தனர். இரு தரப்பு தகராறு முற்றியதால் சட்டம்- ஒழுங்கை காரணம் காட்டி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
இதற்கு நீதிபதி, அலுவலகத்திற்கு சீல் வைத்ததை எதிர்க்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா? என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் கேள்வி எழுப்பினார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று வாதிட்டார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் கட்சி அலுவலகத்தை ஒப்படைக்க மனுவில் ஓ.பன்னீர்செல்வம் கோரியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க அ.தி.மு.க. அலுவலகம் ஒன்றும் தனிநபர் சொத்து அல்ல. ஓ.பன்னீர்செல்வம் தற்போது ஒருங்கிணைப்பாளரும் அல்ல, அவரைக் கட்சியிலிருந்து நீக்கி தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம் எனத் தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சதீஸ்குமார், வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று காலை முதல் மாலை வரை நடந்ததை வீடியோ ஆதாரங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை மதியம் 02.30 மணிக்கு ஒத்திவைத்தார்.