திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநெடுங்களம் ஊராட்சி மன்றத்தில் கடந்த 24ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வரின் வாழ்த்து மடல்களை அந்தெந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கி தங்களுடைய பணியை சிறப்பாக செய்ய வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட திருநெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதி(அதிமுக) தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இந்த கிராம சபை கூட்டத்தில் தமிழக முதல்வரால், வழங்கப்பட்ட வாழ்த்து மடலை அமைச்சர், ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதிக்கு வழங்கினார்.
இந்த நிலையில், நேற்று (25.4-22) அதிமுக உட்கட்சி தேர்தல் லால்குடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அதில் ஸ்ரீநிதி பொதுக்குழு உறுப்பினருக்கான தொகையை செலுத்தப் போனபோது, அக்கட்சி நிர்வாகிகள் தடுத்து தகராறு செய்து வெளியில் தள்ளியதாக கூறப்படுகிறது.
அதேசமயம், இது குறித்து ஸ்ரீநிதி ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘இதுகுறித்து அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரிடம் கேட்டதற்கு என்னை கடந்த 13ம் தேதியே கட்சி பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கிவிட்டதாக கூறுகிறார். ஆனால் தலைமையிலிருந்து இது நாள் வரையிலும் எந்தவித அறிக்கையும் வரவில்லை. நான் ஊராட்சி மன்ற தலைவராக தமிழக முதல்வரின் வாழ்த்து மடலை அமைச்சரிடம் இருந்து வாங்கியதால் என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், பொதுக்குழு உறுப்பினரிலிருந்தும் நீக்கிவிட்டார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தேவராயநேரியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஸ்ரீநிதியின் கணவர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். இதுவும் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.