தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார்.